உக்ரைன் போரால் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை - ஐநாவில் இந்தியா கவலை

உக்ரைன் போரால் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை - ஐநாவில் இந்தியா கவலை
உக்ரைன் போரால் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை - ஐநாவில் இந்தியா கவலை
Published on

உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளில் உணவு தானியங்கள், உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், எரிபொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், ஐ.நா.வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சார்பில் “கவலை” தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, இருநாடுகளுக்கும் இடையே நீடிக்கும் போரால் வளர்ந்து வரும் நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலகளவில் ஸ்திரதன்மையற்ற தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக கூறினார். உணவு, எரிசக்தி பாதுகாப்பு சவாலாகி விட்டதாகவும், எரிபொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும் கவலை தெரிவித்தார். போரால் எந்த நாட்டிற்கும் வெற்றி கிட்டப்போவதில்லை என குறிப்பிட்ட திருமூர்த்தி, ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாகவே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என வலியுறுத்தினார்.

மோதலின் விளைவாக உக்ரைன் மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உயிர் இழப்பு மற்றும் எண்ணற்ற துயரங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மில்லியன் கணக்கானவர்கள் வீடற்றவர்களாகவும், அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் திருமூர்த்தி கூறினார்.

எனவே, உக்ரைனில் போரை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்புவதுதான் சிறந்த வழியாக இருக்கும் எனவும் கூறினார். மேலும், புக்காவில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா இந்த சபையில் கடும் கண்டனங்களை பதிவு செய்து கொள்வதாகவும், இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com