அதிகாரிகளின் பணிநியமன அதிகாரத்தை டெல்லி அரசுக்கு அளிக்க துணைநிலை ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதால், அதிகார மோதல் வலுக்கிறது. இதற்கு தகுந்தாற்போல், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மத்திய அரசு வெளிப்படையாக மறுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை என்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பெய்ஜாலை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சந்தித்து அரசுக்கு ஒத்துழைப்பு கோரினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால், இப்போதும் ஒரு சில கோரிக்கைகளை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து விளக்கமளிப்பதாக கூறினார். வரலாற்றில் இல்லாத வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மத்திய அரசு வெளிப்படையாக மறுப்பதாகவும்அவர் விமர்சனம் செய்தார். இந்நிலையில் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்ததாகவும் அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்க தயாராக இருப்பதாகவும் துணைநிலை ஆளுநர் அனில் பெய்ஜால் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.