மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதியக் கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்தப் புதியக் கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் குஷ்பூவின் வரவேற்பு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனையடுத்து பலரும் அவரை ட்விட்டரில் குஷ்பூ பாஜகவில் சேர்ந்துவிட்டதாக விமர்சிக்க தொடங்கினர். பாஜகவினர் குஷ்பூவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கொடி பிடித்தனர். இதனையடுத்து தனது விளக்கத்தையும் ட்விட்டரில் இப்போது பதிவிட்டுள்ளார் குஷ்பூ அதில் "பாஜகவினர் பொறுமையாக இருக்கவும். நான் பாஜகவுக்கு செல்லவில்லை. என் கட்சியின் கருத்தில் இருந்து தனிப்பட்ட முறையில் நான் மாறுபடுகிறேன். தனிப்பிட்ட முறையில் என்னுடைய மனது என்ன சொல்கிறதோ அதை சொன்னேன். புதியக் கல்விக் கொள்கையில் சில பின்னடைவு இருக்கிறது. ஆனால் நேர்மறையாக செயல்பட்டால் நிச்சயம் மாற்றலாம்" என்றார்.
மேலும் " புதியக் கல்விக் கொள்கையில் இருக்கும் சாதகமான அம்சங்களை மட்டுமே இப்போது நான் பார்க்கிறேன். பாதகமான அம்சங்கள் குறித்து விவாதித்து சரி செய்யலாம். நாம் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டுமே தவிரே வெறும் குரலை மட்டும் உயர்த்தினால் போதாது. எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும். இதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்" என்றார் குஷ்பூ.
தொடர்ந்து தன்னுடைய பதிவில் "அரசியல் வெறும் கூச்சலுக்கான இடமல்ல. சேர்ந்து உழைப்பதற்கான களமும் கூட இதனை பாஜகவும், பிரதமர் மோடியும் புரிந்துக்கொள்ள வேண்டும். எதிர்கட்சியாக நாங்கள் புதியக் கல்விக் கொள்கையை முழுவதுமாக படித்து அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டுவோம். அதனை சரி செய்வது மத்திய அரசின் கடமை" என கூறியுள்ளார்.
தன்னுடைய தொடர்ச்சியான பதிவில் ராகுல்காந்தியை டேக் செய்த குஷ்பூ " தேசியக் கல்விக் கொள்கையில் கட்சியின் கருத்தில் இருந்து முரண்பட்டதற்கு ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மனதில்பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவேன் நான் ரோபோவோ அல்லது தலையாட்டும் பொம்மையோ கிடையாது. தலைமை சொல்லும் அனைத்துக்கும் சரியென்று சொல்லிவிட முடியாது. ஒரு குடிமகனாக எனக்கு தோன்றிய கருத்தை சொல்வதற்கு எல்லா துணிச்சலும் எனக்கு இருக்கிறது"
"ஒரு நாட்டுப்பற்றுல்ள குடிமகளாய் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதவும் எதிர்கட்சியாக இருப்பதால் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் அதற்கான தீர்வுகளையும் தர விரும்புகிறேன், அதுவே கடைமாயகவும் நினைக்கிறேன்" என குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.