தேரா சச்சா சவுதா அமைப்பிற்கு சொந்தமான 9 பிரார்த்தனை மையங்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அங்கிருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந் நிலையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 400க்கும் அதிகமான ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்ட தேரா அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு படைகள் இறங்கி உள்ளது.
குருஷேத்ரா போலீஸ், தேரா சச்சா சவுதா அமைப்பிற்கு சொந்தமான 9 பிரார்த்தனை மையங்களுக்கு சீல் வைத்துள்ளது. அங்கிருந்து சுமார் 2,500 தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.
முன்னதாக மையத்தில் இருந்து சாமியாரின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர். அரியானாவில் உள்ள சாமியாருக்கு சொந்தமான அனைத்து ஆசரமங்களிலும் சோதனையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.