இந்திய முன்னாள் கப்பற்படை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய முன்னாள் கப்பற்படை அதிகாரி குல்பூஷன் ஜதேவ். இவர் பாகிஸ்தானுக்கு எதிராக பலுஜிஸ்தானில் வன்முறையைத் தூண்டி விட்டார் எனவும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக யுத்தம் தொடுக்க முயற்சித்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று ஜதேவ் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணை பாகிஸ்தான் ராணுவத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜதேவ் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வால் நியமிக்கப்பட்டவர் எனவும், பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத இயக்கங்களின் போராட்டத்தைத் தூண்டி விட்டார் எனவும் பலுஜிஸ்தான் பாகிஸ்தான் இடையேயான அமைதி முயற்சியும் பாகிஸ்தான் சீனா இடையே 4600 கோடி செலவிலான பொருளாதார திட்டங்களையும் சீர்குலைக்க முயற்சித்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தீர்ப்பளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
ஜதேவ் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதாக கூறியுள்ள பாகிஸ்தான், அவர் வாக்குமூலம் அளித்ததாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திய கப்பற்படையில் முன்பு வேலை பார்த்ததாகவும் பின்னர் 2003ல் ஈரான் சென்று அங்கு ஒரு சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் ஜதேவ் கூறியுள்ளார். ஜதேவ் மகாராஷ்ட்டிராவில் பிறந்தவர் எனவும் அவர் ஈரானில் வசிப்பதற்கான உரிமை வைத்திருந்தார் எனவும் ஹூசேன் முபாரக் பட்டேல் என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தார் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.