அணுக்கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பை உருவாக்கக் கோரிய வழக்கில், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை முறையான வகையில் பாதுகாத்து சேமிக்க உரிய கட்டமைப்பை உருவாக்கக் கோரியும், அதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அணு உலைக்கு வெளியே பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்த கூடுதலாக 50 மாதங்கள், அதாவது ஜூலை 2026ம் ஆண்டு வரை காலஅவகாசம் வேண்டும் என்று இந்திய அனுசக்தி கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு அமர்வில் விசாரிக்கப்படுகிறது. அணுகழிவுகளை உரிய முறையில் பாதுகாக்கவில்லை என்றால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு மனித உயிர், விலங்கு, சுற்றுசூழல் என அனைத்துக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தற்காலிக கட்டமைப்புகள் நிலநடுக்கம், இயற்கை பேரிடர், விபத்துக்களை தாங்கும் வல்லமை உள்ளதாக அமைக்கப்படுவதில்லை. எனவே அதன் பாதுகாப்பு கேள்விக்குறியானதே. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்கும் அணுக்கதிர்வீச்சை கக்கும் உலோகங்களை திறந்த வெளியில் தற்காலிகமான கட்டமைப்பில் பாதுகாப்பாக வைப்பதை எவரும் ஏற்க மாட்டார்கள்.
அவ்வாறு அணு மின்நிலைய வளாகத்திலேயே பாதுகாப்பாக வைப்பது ஆபத்தை விளைவிக்கும். அதிலிருந்து கதிர்வீச்சு கசிந்தால் அது கடும் உடற்பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் அதனை சுத்தப்படுத்தவும் ஆயிரக்கணக்கான கோடிப் பணத்தை செலவளிக்க வேண்டியது வரும். அணுக்கழிவுகளை பாதுகாப்புது கடும் சவாலான விஷயம் என்பது சர்வதேச அளவிலான அனுபவத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 3 மற்றும் 4க்கு அணுகழிவுகளை உலையிலிருந்து தொலைதூரத்தில் பாதுகாக்கும் தொழில்நுட்பம் கொண்ட கட்டமைப்பு ஏற்படுத்த இதுவரை சுற்றுசூழல் அனுமதி பெறவில்லை.
அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டுமானத்துக்கு உரிய சுற்றுசூழல் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாமல் அணு உலையையே அமைக்க முடியாது. மேலும் இந்த கட்டமைப்பை உருவாக்க தனியாக சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்று இந்திய அணுசக்தி கழகம் கூறுவது தவறானது. அதேபோல் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் வராத வண்ணமே பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், குறிப்பாக தொலைதூர அணுக்கழிவு சேமிப்பு கட்டமைப்பு உருவாக்கவும் , அணுக்கழிவுகளை சேமிக்க ஆழ் புவி கிடங்கை 5 ஆண்டுகளில் ஏற்படுத்தவும் 2013ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த இரண்டு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை,
இதனையடுத்து மீண்டும் ஏப்ரல் 2022 வரை கால அவகாசம் வழங்கி கடந்த 2018ல் உத்தரவிடப்பட்டது. ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இந்திய அணுசக்தி கழகத்தின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது. அதே போல அணுக்கழிவுகளை சேமிக்க கட்டமைப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கூடுதல் காலகட்டமான 2013 முதல் 2018 ஆண்டு வரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 1வது அலகில் ( Unit 1) 40 முறை உற்பத்தி நிறுத்தப்பட்டும், தானாக அணைந்தும் உள்ளது.
மக்களின் நலன் கருதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகளை உடனடியாக ரஷ்யாவுக்கு எடுத்து செல்ல வேண்டும் என தமிழக முதலமைச்சரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த அணு உலை மற்றும் அணுக்கழிவுகளை சேமிக்கும் விவகாரத்திலும், அணு உலையிலிருந்து தொலைதூரத்தில் அணுக்கழிவு சேமிப்பு கட்டமைப்பை (AFR) உருவாக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்திய அணுசக்தி கழகம் அளித்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாக மீறியுள்ளது. எனவே அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க நீதிமன்ற கொடுத்த அவகாசம் முடிய மிகக்குறுகிய காலம் இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் மீண்டும் கால நீட்டிப்பு அவகாசம் கோருவதை ஏற்கக்கூடாது என ஏற்கனவே பூவுலகின் நண்பர்கள் தரப்பு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில் சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால் அத்தகைய கூட்டங்களை நடத்தாமல் இருக்கிறது என குறை கூறினார்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மட்டும் 40 முறைகளுக்கு மேல் தொழில்நுட்பக் கோளாறு என்பது கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டும். இல்லை என்றால் செர்னோபில் மற்றும பூசிமா ஆகிய அணு உலைகளில் ஏற்பட்டது போன்ற மிகப்பெரிய அசம்பாவித விபத்துக்கள் இங்கும் ஏற்படலாம் காரணம் அணுக்கழிவுகளை கையாள்வது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றாகவும் செயல்படுத்தப்படும் விதம் வேறொன்றாகவும் இருக்கிறது. அணு உலை போன்றவற்றை கையாள நீதிமன்றங்கள் கொடுத்த உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க முற்படுகையில் குறிப்பிட்ட தலைமை நீதிபதி ஏற்கவே நீங்கள் 2026 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வாங்கி இருக்கிறீர்கள். 2026 ஆம் ஆண்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்பொழுது மேலும் கூடுதல் கால அவகாசம் வாங்குவீர்கள் இது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசிடம் இருந்து நாங்கள் சில செயல்பாடுகளை எதிர்பார்க்கிறோம் என தலைமை நீதிபதி கூறினார்.
மேலும் வழக்க இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் அதற்குள் வழக்கில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் அரசு செய்திருக்கக்கூடிய செயல்முறைகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.