உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய இரண்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ஸ்மார்ட் போன் பரிசு வழங்கி கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் கௌரவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் உரகஹள்ளியில் இருந்து ராமநகர் நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து சென்றது. அப்போது ராமநகர் அருகே சுரங்கபாதையில் தேங்கி இருந்த மழைநீரில் பேருந்து சிக்கிக்கொண்டது.
இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் லிங்கராஜ் மற்றும் நடத்துனர் வெங்கடேஷ் ஆகியோர் நீச்சல் தெரியாத போதிலும் தங்களது உயிரை பணயம் வைத்து பேருந்தில் இருந்து இறங்கி மழைநீரில் நடந்து சென்று கிராம மக்களை உதவிக்கு அழைத்து வந்தனர். பின்னர் பேருந்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து உயிரை பணயம் வைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய லிங்கராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு பெங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி. அலுவலகத்தில் வைத்து பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புகுமார் கலந்துகொண்டு இருவருக்கும் ஸ்மார்ட் போனை பரிசாக வழங்கி பாராட்டினார்.