கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றத்தின் உறுப்பினருமான கே.ஆர்.கெளரி அம்மா தனது 101 வயதில் காலமானார்.
கெளரி அம்மா, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயதுமூப்பு தொடர்பான பிரச்னைகளால் காலமானார். கெளரி அம்மா 1957 இல் அமைக்கப்பட்ட இ.எம்.எஸ் அமைச்சரவையில் கேரளாவின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். 1964 ல் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த பின்னர், அவர் சிபிஎம்-ல் இணைந்தார். 1994 ஆம் ஆண்டில், உட்கட்சி பிரச்னைகளால் அவர் சிபிஐ (எம்) இலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் அவர் ஜனதிபத்ய சமரக்ஷனா சமிதி (ஜே.எஸ்.எஸ்) எனும் கட்சியை உருவாக்கி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யு.டி.எஃப்) சேர்ந்தார். கவுரி அம்மா 2001 முதல் 2006 வரை யுடிஎஃப்-பின் அமைச்சரவையில் வேளாண் அமைச்சராக இருந்தார்.
கேரளாவில் வரலாற்று சிறப்புமிக்க நில சீர்திருத்த மசோதாவின் உந்துசக்தியாக கெளரி அம்மா இருந்தார். 1957 ஆம் ஆண்டில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து குத்தகைதாரர்களையும் வெளியேற்ற தடை விதித்து ஆணை பிறப்பித்தார். 1957 ஆம் ஆண்டில், கேரள அமைச்சரவையிலுள்ள தனது சகாவான டிவி தாமஸை மணந்தார் கெளரிஅம்மா. இருப்பினும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் பிளவு காரணமாக இவர்கள் பிரிந்தனர். கட்சியின் பிளவுக்கு பின்னர் கெளரி அம்மா சிபிஐ (எம்) இலும், அவரது கணவர் டி.வி தாமஸ் சிபிஐ யிலும் இணைந்தனர். இருப்பினும் சுவாரஸ்ய நிகழ்வாக, டிவி தாமஸ் மற்றும் கே.ஆர்.கெளரி அம்மா இருவரும் வெவ்வேறு கட்சிகளின் சார்பாக 1967- 1969 வரை அமைச்சர்களாக இருந்தனர். 1977 இல் டிவி தாமஸ் தனது 67 வயதில் இறந்தார்.