கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் சூதாட்டத்தில் ஈடுபட்ட சர்வதேச தரகர் சயாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கர்நாடக பிரிமீயர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சி.எம். கவுதம் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிரணி வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அவர் மெதுவாக விளையாடினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சி.எம்.கவுதம் மற்றும் அபர் காசி ஆகிய இரு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கர்நாடகா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் கைது செய்யப்பட்டார்.