‘ஆணவக்கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்’ - நீதிமன்றம் தீர்ப்பு

‘ஆணவக்கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்’ - நீதிமன்றம் தீர்ப்பு
‘ஆணவக்கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்’ - நீதிமன்றம் தீர்ப்பு
Published on

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கெவின் கல்லூரியில் படிக்கும் போது நீனு என்ற பெண்ணை காதலித்தார். நீனு வேறு சமூகத்தை சேர்ந்தவர். அவர்களது காதலுக்கு நீனு குடும்பத்தினரிடம் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. குடும்பத்தினரை எதிர்ப்பை அடுத்து நீனுவும், கெவினும் கடந்த ஆண்டு மே மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். 

திருமணத்தால் கோபமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கெவினின் வீட்டை சூறையாடினர். மேலும் கெவினையும் அவரது நண்பரான அனீஷையும் கடத்திச் சென்றனர். அனீஷை கடுமையாகத் தாக்கி கும்பல் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றது. கடத்தப்பட்ட கெவின், மறுநாள் கொல்லம் அருகேயுள்ள ஓடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

இதனையடுத்து கெவினின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் கெவின் உயிரிழப்பு தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீனுவின் சகோதரருக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவரது தந்தை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

தீர்ப்பில், தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரும் ஆயுள் தண்டனையை ஏக காலத்துக்கு அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.40 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத்தொகையில் இருந்து நீனுவுக்கும், கெவினின் அப்பாவுக்கும் தலா ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும். அதேபோல் கெவினின் நண்பரான அனீஷுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com