மட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா?

மட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா?
மட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா?
Published on

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மட்டன்சூப்பில் சயனைடு வைத்து ஜூலி என்ற பெண் கொலை செய்த சம்பவத்தில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. மணவாழ்க்கை கசப்பாக இருந்ததால் மனதிற்குள் மருகிக் கொண்டிருந்த ஜூலிக்கு மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவை பிடித்திருந்தது. அவருக்கும் அதே எண்ணம் இருப்பதை அறிந்த ஜூலி இருவரும் இணைவதற்கு தடையாக இருக்கும் குடும்பத்தை என்ன செய்வதென்று யோசித்தனர். கூண்டோடு குடும்பத்தினரின் கதையை முடித்துவிடலாம் என முடிவெடுத்தவர்.

அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜுவிடம் இருந்து சயனைடை வாங்கியுள்ளார். ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் அவர். ஒரே நேரத்தில் எல்லோரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார். 

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால்தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்ற முடியும் என்பதும் அதற்கு ஒரு காரணம். முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து அவருக்கு கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வாந்தி எடுத்த அன்னம்மா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார் ஜூலி. திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டிருந்த போது அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜுலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஜூலி 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு மட்டன் சூப் கொடுக்க பிரச்னை முடிந்தது. தன்வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையின் மீது திரும்பியது. 2016-ல் அவர்களுக்கும் சயனைடு கலந்த சூப் கொடுத்தபின் 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குடும்பத்தினரின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் ஜூலி. 

இனி சயனைடு சூப் தேவைப்படாது என எண்ணியிருந்த போது, சாஜூவின் மனைவி இறந்து ஒராண்டுக் கூட முடியாத நிலையில் சாஜூவும், ஜூலியும் திருமணம் செய்தது உறவினர்கள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர் தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஜூலியின் சயனைடு சூப்பில் இருந்து தப்பியிருந்தார். இதே போல் சாஜுவின் மனைவி சிலியின் உறவினர்களும் புகார் அளிக்க உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு கூறாய்வு செய்யப்பட்டன. அதன்மூலம் உண்மை வெளிவந்தது. இதுதொடர்பாக ஜூலி, அவரது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியர் சாஜு ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் 6 பேரையும் கொலை செய்ததை ஜூலி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தெரிவித்த போலீசார், அனைவரும் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரத்தில் இறந்துள்ளனர். எனவே சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது உறுதியானது. முதல் கொலையான அன்னம்மா உயிரிழப்புக்கு முன்னதாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது ரத்தத்தை பரிசோதனை மருத்துவர்கள் இறப்புக்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அதனால் இத்தனை கொலைகள் தொடர்ந்துள்ளன என தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த சீரியல் கொலை சம்பவம் தொடர்பாக கேரள சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மேலும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிலரது கொலைகள் மற்றும் கொலை முயற்சி சம்பவங்களில் ஜூலிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகளை கொலை செய்ய முயற்சித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஜூலியின் வீட்டில் இருந்த நேரங்களில் அந்த சிறுமிகளின் உடல்நிலையில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ஜூலியின் உறவினர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோல், அதேப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மீது போலீசாரின் பார்வை சென்றுள்ளது. ஏனெனில், ஜூலி பார்ட்னராக இருந்த பியூட்டி பார்லரின் மற்றொரு பார்ட்னருடன் ராமகிருஷணனுக்கு பண சிக்கல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராமகிருஷ்ணன் மகன் ரோகித் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜூலிக்கும் ராமகிருஷ்ணனுக்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்தும் போலீசார் தகவல்களை திரட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com