கொல்கத்தா | உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்த சஞ்சய் ராய்.. நார்கோ டெஸ்ட் என்றால் என்ன?

முதுகலை பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ டெஸ்ட்) நடத்த வேண்டும் என கோரிய நிலையில், அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் சிபிஐ தற்போது அதை நிராகரித்துள்ளது.
சஞ்சய் ராய், சிபிஐ
சஞ்சய் ராய், சிபிஐஎக்ஸ் தளம்
Published on

கொல்கத்தாவில் தொடரும் போராட்டம்

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது.

இந்த விசாரணையில் காவல் தன்னார்வலர் சஞ்சய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம் இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிக்குத் திரும்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், "போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புங்கள்" என்று மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களுடைய போராட்டம் காரணமாக, மாநிலத்தில் 7 லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 29 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: AFG Vs NZ| 26 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட்.. என்ன காரணம்?

சஞ்சய் ராய், சிபிஐ
”முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்.. நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் கவலை” - மம்தா பானர்ஜி

உயிரிழந்த நோயாளிகளுக்கு ரூ.2 லட்சம்  நிவாரணம்

இந்த நிலையில், போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாநில அரசு அழைப்பு விடுத்தது. நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி, மக்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக தலைவர்கள் அவருடைய கருத்துக்கு எதிராகப் பதில் அளித்திருந்தனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேநேரத்தில், போராட்டக் களத்தில் இருக்கும் பயிற்சி மருத்துவர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 4 பக்கம் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தின் நகலை, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே முதுகலை பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ டெஸ்ட்) நடத்த வேண்டும் என சிபிஐ கோரியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய், இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரிடம் நீதிபதி, ”தங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனையில் பங்கேற்க விருப்பமுள்ளதா” எனக் கேள்வி கேட்டார். ஆனால், அதற்கு சஞ்சய் ராய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிபிஐ, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவதற்கு நிராகரிப்பு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்றம்சாட்டப்பட்டவரின் தன்னார்வ ஒப்புதல் இல்லாமல் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: "26.169 கி.மீ.. 108 நாட்கள்"-உலகிலேயே அதிவேகமாக சைக்கிள் பயணம் | புதிய சாதனை படைத்த அமெரிக்கப் பெண்!

சஞ்சய் ராய், சிபிஐ
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை | மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ அதிரடி!

உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ டெஸ்ட்) என்பது என்ன?

நார்கோ டெஸ்ட் எனப்படும் உண்மை கண்டறியும் என்பது குற்றஞ்சாட்ட நபரிடம் நரம்பு வழியாக மருந்தினை செலுத்தி, மயக்க நிலையில் ஆழ்த்தி செய்யப்படும் ஒரு வகை சோதனையாகும். சோடியம் பென்டோத்தல், சோடியம் அமைடால் போன்ற மருந்துகளை ஒருவருக்குச் செலுத்தும்போது, அந்த நபரின் சுயநினைவுத்திறன் சற்று மட்டுப்படும். அப்போது அந்த நபர் ஹிப்னோடிக் நிலை அல்லது மயக்கநிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் அவரால் பொய் கூற முடியாது எனவும், சிந்தித்துச் செயல்பட முடியாது எனவும் நம்பப்படுகிறது. இதன்மூலம் அவரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான தகவல்களைப் பெற முடியும்.

narco test
narco testfreepik

அப்போது, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவோ அல்லது வழக்கின் கண்டுபிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்துகொள்ளவோ மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சிதான் இந்த உண்மை கண்டறியும் சோதனை. ஆனால் இந்த சோதனை தடய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும். இதற்கு நீதிமன்ற அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். இந்த சோதனையின்போது குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் கூறப்படும் எதையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்ய முடியாது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த சோதனைகளின்போது தெரிவிக்கும் தகவல்களைக் கொண்டு விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்ட மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதையும் படிக்க: ”தயவுசெய்து என்னைக் காப்பாத்துங்க”-குவைத்தில் சித்திரவதை அனுபவிக்கும் ஆந்திரப் பெண் வீடியோ வெளியீடு!

சஞ்சய் ராய், சிபிஐ
கொல்கத்தா | Ex-Dean உட்பட 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை! அவிழ்க்கப்படுமா மர்ம முடிச்சுகள்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com