அறுவை சிகிச்சை அரங்கில் அரை மயக்கத்தில் படுத்திருந்த தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனயில் 39 வயதான பெண் ஒருவர் பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நேற்று (வியாழக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணியளவில் அப்பெண் அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டார். காலை 11 மணி அளவில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து முடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை அரங்கில் அரை மயக்கத்தில் படுத்திருந்த தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் பூல்பகான் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ''ஆபரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுத்து நான் அரை மயக்கத்தில் படுத்திருந்தபோது, வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் எனது அந்தரங்க உறுப்புகளைத் தொடுவதை உணர்ந்தேன். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னால் எல்லாவற்றையும் உணர முடிந்தது. நான் மயக்க நிலையில் இருந்தததால் அந்த நபரை என்னால் தடுக்க முடியவில்லை. நான் மெதுவாக சுயநினைவுக்கு திரும்பி கண்களை திறந்துபார்த்தபோது பாலியல் வன்கொடுமைஉ செய்யப்பட்டதற்கான அறிகுறியை உணர்ந்தேன். இச்சம்பவம் நடந்தபோது பெண் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. ஆபரேஷன் தியேட்டருக்குள் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கொல்கத்தா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புகார் தெரிவித்த பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் பிரியோபிரதோ ராய் கூறுகையில், "இது அந்த பெண்மணி எழுப்பியது மிகக் கடுமையான குற்றச்சாட்டு. அடையாளம் தெரியாத குற்றவாளிக்கு எதிராக ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.