கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் தனியாக வழக்கு விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தொடங்கியதும் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும். விசாரணையின் போது பல்வேறு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.