பயிற்சி மருத்துவர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடற்கூறாய்வு முடிவுகளில் வெளிவந்த உண்மை பலரையும் மேலும் அதிர்ச்சியுள்ளாக்கியது. இதனையடுத்து கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
மருத்துவர்கள், மாணவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டது. அதற்கான அனுமதி சிபிஐ-க்கு உடனடியாக கிடைத்தது. இதனையடுத்து சஞ்சய் ராய், சந்தீப் கோஷ் உயிரிழந்த பயிற்சி மருத்துவர் உடன் இரவு உணவு சாப்பிட்ட 4 மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக மருத்துவனைக்குள் சஞ்சய் ராய் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதில் ஜீன்ஸ் மற்றும் டி- சர்ட் அணிந்துள்ள அவர் ஹெல்மட்டுடன் செல்வது தெரிகிறது. இந்த ஹெல்மெட் மருத்துவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட அதே ஹெல்மட் என கூறப்படுகிறது. சிசிடிவி காட்சி விசாரணையில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.