"கொடநாடு எஸ்டேட் என்னுடையது" - வருமான வரித்துறைக்கு சசிகலா தரப்பு தகவல்

"கொடநாடு எஸ்டேட் என்னுடையது" - வருமான வரித்துறைக்கு சசிகலா தரப்பு தகவல்
"கொடநாடு எஸ்டேட் என்னுடையது" - வருமான வரித்துறைக்கு சசிகலா தரப்பு தகவல்
Published on

ஜெயலலிதா மறைவுக்குப் பின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என்று சசிகலா வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி பணத்தை கடனாக வழங்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்பட்ட கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்று சசிகலா கூறி இருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார். அவர் பரோலில் வந்து சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், சசிகலாவின் உறவினர் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அதில்தான் அவர் ரூ.1,900 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்தது தெரிய வந்தது.

எனவே, இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினார்கள். 2017-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி இந்த நோட்டீஸ் பெங்களூரு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டது. அதில், அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இவ்வளவு பணம் எப்படி வந்தது? அதற்கான கணக்குகளை வருமான வரித்துறையிடம் ஏன் தாக்கல் செய்யவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 22-ந்தேதி சசிகலாவின் ஆடிட்டர் வருமான வரித்துறைக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பினார். அதில், வருமான வரித்துறையின் நோட்டீஸ் 19 ஆம் தேதி தான் எங்களுக்கு கிடைத்தது. 22 ஆம் தேதிக்கு 3 நாட்களே அவகாசம் இருக்கும் நிலையில் எங்களால் இதற்கு பதில் அளிக்க முடியாது. மேலும் சசிகலா ஜெயிலில் இருப்பதால் உரிய தகவல்களை உடனடியாக திரட்ட முடியாது. எனவே, பதில் அளிப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். ஆனால், வருமான வரித்துறை 15 நாட்கள் அவகாசம் வழங்கியது. ஆனாலும், அந்த நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக டிசம்பர் 11 ஆம் தேதி சசிகலா சார்பில் ஆடிட்டர் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் ரூ.1,900 கோடி பண மதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்றியும் எந்தத் தகவலும் தெரியாது என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சசிகலாவுக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன? அதில் எவ்வாறெல்லாம் வருமானம் வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 2016-17, 2017-18 நிதியாண்டுகளில் சசிகலாவிடம் இருந்த சொத்துக்கள் விவரங்களை அதில் பட்டியலிட்டு இருந்தனர். நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாக சசிகலா குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரர் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com