கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பரந்து விரிந்த கானக பகுதியில் அமைந்துள்ளது சபரிமலை. இந்த மலை மீது கோயில் கொண்டு குடியிருக்கும் ஐயப்ப சுவாமியை காண மண்டல கால பூஜை நேரமான கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வாடிக்கை.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவலை அடுத்து ஐயப்ப சாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது கேரள அரசு. குறிப்பாக ஆன்லைன் மூலம் VIRTUAL Q-வில் முன்பதிவு செய்ப்வர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது அம்மாநில அரசு.
இந்த VIRTUAL Q நடைமுறை சபரிமலையில் மண்டல காலங்களில் வருகின்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தது. அதை இந்த பெருந்தொற்று காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறது அரசு.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி முன்பதிவு ஆரம்பமானது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்தது. அதற்கான புக்கிங் ஒரு மணி நேரத்தில் அறுபது நாட்களுக்கும் நிறைவடைந்தது. இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து தேவசம் போர்டிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து 23 மற்றும் 24 தேதிகளில் மீண்டும் முன்பதிவை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்முறை நாள் ஒன்றுக்கு 2000 முதல் 5000 பேர் வரை தரிசனத்திற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா பரிசோதனை, இரவு 7 மணிக்கு மேல் பம்பையிலிருந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி இல்லை மாதிரியான கெடுபிடிகள் தொடர்கின்றன.
விவரங்களுக்கு : https://sabarimalaonline.org/