ஓடும் ரயிலில் கிகி சேலஞ்ச் செய்த இளைஞர்களுக்கு ரயில்வே நடைமேடையை சுத்தப்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் கிகி சேலஞ்சை, மும்பையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஓடும் ரயிலில் செய்துள்ளனர். அந்த வீடியோவை யூடியூபில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை வைத்தும், ரயில்வே நடைமேடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கொண்டும் இளைஞர்களை ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் தேடி கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வசாய் என்ற ரயில் நிலையத்தின் நடைமேடையை மூன்று நாட்களுக்கு சுத்தம் செய்ய இளைஞர்களுக்கு தண்டனை வழங்கினர். மேலும் கிகி சேலஞ்சில் இருக்கும் அபாயம் குறித்து மக்களுக்கு பிரசாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. தண்டனை பெற்ற இளைஞர்களின் முகநூலில் அவர்கள் ஏற்கெனவே ஆம்புலன்சில் கிகி சேலஞ்ச் செய்த வீடியோ பதிவாகியுள்ளது.
அது என்ன கிகி சேலஞ்ச்..?
கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இந்த பாடல் தொகுப்பில் அடங்கிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடலில் இடம்பெற்றுள்ள கிகி ஐ லவ்யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்பதுதான் சவால்.
இந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே இவ்வாறு நடனம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.
தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. பிரபல நடிகை ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோவை வெளியிட்டார். இதனிடையே டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.