ஹைதராபாத்தில் கடத்தப்பட்ட 18 மாதக்குழந்தையை போலீசார் மீட்டனர். அந்தக்குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தக்குழந்தையுடன் தொடர்புடைய 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை சாலையோரத்தில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையைக் காணவில்லை என போலீசாரிடம் புகார் தெரிவித்தார். தான் தூங்கிக் கொண்டு இருந்த போது குழந்தை காணாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 27 வயதான ஒருவர், குழந்தையிடம் பழங்களை கொடுத்து தனது இரு சக்கரவாகனத்தில் கடத்திச் செல்கிறார். இதனைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த நபரை கைது செய்தனர். தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதால் குழந்தை மீது உள்ள ஆசையால் திருடிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தையை தாயிடம் ஒப்படைக்கலாம் என்று பார்த்தால் குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை அவரால் வளர்க்க முடியாது என்பதால் குழந்தைகள் நல வாரியத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
அப்போது செய்யப்பட்ட சோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்தக்குழந்தையின் தாயார், குழந்தையைக் கடத்தியவர் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீசார், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 22 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்