தென் கொரியாவின் கார் உற்பத்தி நிறுவனம் கியா மோட்டார்ஸ். உலகப் புகழ்பெற்ற இந்த நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய தொழிற்சாலையை ஆந்திராவில் திறந்தது. உலகளவில் மிகப்பெரிய கார் தொழிற்சாலையை இரண்டு வருட கட்டுமான பணிகளுக்கு பின் கியா ஆந்திராவில் திறந்தது. 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன், 12ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற மாபெரும் தொழிற்சாலையாக கியா மோட்டார்ஸ் ஆந்திராவில் உள்ளது.
இந்நிலையில், ஆந்திராவின் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக உள்ள கியா மோட்டார்ஸ், தமிழகத்திற்கு தன் தொழிற்சாலையை மாற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திராவில் ஜெகன்மோகனின் ஆட்சிக்கு பின்னர் பல மாறுதல்கள் நடந்தன. அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 75% பணியை உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும் என ஆந்திர அரசு அறிவித்தது. இது கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிக்கலாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், முந்தைய சந்திரபாபுநாயுடு தலைமையிலான அரசுடன் செய்யப்பட்ட சில ஒப்பந்த சலுகைகள் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் பல நடைமுறை சிக்கல்களை சந்தித்து வரும் கியா நிறுவனம் தொழிற்சாலையை அருகில் உள்ள மாநிலமான தமிழகத்திற்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், தொழிற்சாலையை இடம் மாற்ற தற்போதைக்கு திட்டமில்லை என்று கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் கியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹூண்டாய் உதவியுடன் தமிழகத்திலும் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.