ஐஸ்க்ரீம் விற்ற அதே ஊரில், சப் இன்ஸ்பெக்டராக களமிறங்கிய கேரள பெண் அதிகாரி ஆனி சிவா

ஐஸ்க்ரீம் விற்ற அதே ஊரில், சப் இன்ஸ்பெக்டராக களமிறங்கிய கேரள பெண் அதிகாரி ஆனி சிவா
ஐஸ்க்ரீம் விற்ற அதே ஊரில், சப் இன்ஸ்பெக்டராக களமிறங்கிய கேரள பெண் அதிகாரி ஆனி சிவா
Published on

கேரளாவின் திருவனந்தபுரத்தில், தடம் மாறிய தன்னுடைய வாழ்க்கையை வென்றெடுத்து, பல பெண்களுக்கு முன்மாதிரியாகியுள்ளார் ஆனி சிவா என்ற பெண்.

தற்போது 31 வயதாகும் ஆனி, தன்னுடைய 18 வயதில் காதல் திருமணம் செய்திருக்கிறார். பெற்றோரின் சம்மதமின்றி நடந்த அவரது திருமணம், சில மாதங்களிலேயே மனமுறிவில் முடியுமென ஆனி கொஞ்சம் கூட நினைக்கவில்லை. டீனேஜை தாண்டுவதற்கு முன்னாலேயே, ஒரு குழந்தைக்கு தாயான ஆனியை, அவரின் காதல் கணவன் பிரிந்து சென்றிருக்கிரார். அப்போது ஆனியின் குழந்தை, 6 மாதமேயான பச்சிளம்குழந்தை.

தொடர்ந்து எங்கு செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற ஆனிக்கு, பெற்றோர்கூட ஆதரவளிக்கவில்லை. அந்த நேரத்தில் ஆனியின் பாட்டி அவருக்கு ஆதரவளித்து, விட்டுப்போன ஆனியின் படிப்பை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார். கல்வி மட்டுமே ஆயுதுமென்ற உறுதியுடன், இளங்கலை படித்து முடித்த ஆனி, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொலைத்தூர கல்விமூலம் முதுகலையும் படித்துள்ளார்.

தன்னுடைய செலவுக்காக, வயதான தன் பாட்டியின் சுமையை அதிகரிக்க வேண்டாமென நினைத்து சிறு சிறு வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார் ஆனி. அவற்றில் முக்கியமானது கேரளாவின் வர்கலா என்ற பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, லெமன் ஜூஸ் விற்பது - ஐஸ்க்ரீம் விற்பது போன்ற வேலைகள். மேலும் தான் தங்கியிருந்த பகுதியில், மசாலா பொருள்கள் விற்பனை, சலவை சோப்பு விற்கும் ஏஜெண்ட் போன்ற சிறு சிறு வேலைகளையும் செய்துள்ளார் அவர். இதன் மூலம் கிடைத்த பணத்தை சேமித்து, கல்வியை தொடர்ந்திருக்கிறார். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இதற்கிடையில், உறவினரொருவர் ஆனியை போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தியிருக்கிறார். உடனடியாக அப்ளை செய்து, 2016ல் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்திருக்கிறார் ஆனி. தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் உயர்வுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார் அவர். 3 வருட தொடர் முயற்சிக்குப்பின், அதில் தேர்வு பெற்று, 2019ல் பயிற்சி காலத்தை தொடங்கியிருந்திருக்கிறார்.

தற்போது பயிற்சி காலம் முடிந்த நிலையில், தான் மசாலா பொருட்களும் ஐஸ்க்ரீமும் லெமன் ஜூஸும் விற்ற அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக பதிவியேற்றுள்ளார் அவர். மூன்று தினங்களுக்கு முன்னர் (ஜூன் 25), இவரின் பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.

ஆனியை பாராட்டி கேரள காவல்துறை ட்வீட் ஒன்று போட்டுள்ளது. அதில், “18 வயதில், தன்னுடைய 6 மாத குழந்தையுடன் வீதிக்கு தள்ளப்பட்ட ஒரு பெண், தற்போது வர்கலா காவல் நிலையத்தின் துணை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார். மன தைரியத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் உண்மையான உருவம், அவர்தான்" எனக்கூறப்பட்டுள்ளது.

வர்கலா பகுதியில் தான் பணியமர்த்தப்பட்டிருப்பது பற்றி பேசியிருக்கும் ஆனி, “என்னுடைய பணி, வர்கலா பகுதியில் என்று, சில நாட்களுக்கு முன்புதான் எனக்கே தெரிந்தது. இங்குதான் என்னுடைய சிறு குழந்தையுடன் நடு வீதியில் கண்ணீருடன் ஆதரவற்று நான் நின்றேன்.

இங்கு நான் பார்க்காத வேலைகளே கிடையாது என சொல்லும் அளவுக்கு, நிறைய வியாபாரம் செய்தேன். எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அப்போதுதான் உறவுக்காரர் ஒருவர் எனக்கு கொஞ்சம் பொருளுதவி செய்து, காவல்துறையில் சேர விண்ணப்பித்து, படிக்க உதவினார்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஐ.பி.எஸ் ஆகவேண்டுமென்ற ஆசையிருந்தது. இடையிடையே வாழ்க்கை ஏற்படுத்திய சூழ்ச்சிகளால், கனவுகள் அனைத்தும் வெறும் கனவாகவே போனது. ஆனால் நான் சோர்ந்துவிடவில்லை. வாழ்க்கைக்கு பதிலடி கொடுத்துள்ளேன். என் கனவுகளை, நான் சாத்தியப்படுத்தியுள்ளேன். இன்று, வாழ்க்கையை நான் என் வசப்படுத்தியுள்ளேன். இதை நினைக்கும்போதே எனக்கு பெருமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது. சமூக வலைதளத்தில் எனக்கு கிடைக்கும் பாராட்டுகள், என்னை நெகிழ வைக்கிறது. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில், இதுபற்றி நான் எழுதியிருந்த பதிவும் வைரலாகி, பலரும் என்னை கொண்டாடி வருகிறார்கள்.

என்னுடைய கடந்த காலத்தை எதிர்த்து நின்று, அதனுடன் போராடி அதை நான் கடந்து வந்ததால்தான் இன்று என்னால் வெற்றியடைய முடிந்துள்ளது. என்னைப்பார்த்து, யாரேனும் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றால், அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” எனக்கூறியுள்ளார்.

தற்போது ஆனியின் மகன், நன்கு வளர்ந்துவிட்டார். மகனை, ஸ்போர்ட்ஸில் சிறந்தவராக தயார்படுத்திவருகிறார் இந்த தாய்!

ஆனியின் வெற்றிக்கு, மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். "ஆனியின் வெற்றி, பல பெண்களின் வெற்றிக் கனவுக்கு தூண்டுகாலாக இருக்கும். வாழ்த்துகள் ஆனி" எனக்கூறியுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com