வழக்கமாக பனை, தென்னை மரங்களை சர்வசாதாரணமாக ஏறும் எத்தனையோ ஆண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு பெண் ஒருவர் ஆண்களை போல தென்னை மரத்தில் ஏறி பதநீர் எடுத்து வருகிறார்.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பனியோடு பகுதியை சேர்ந்தவர் ஷீஜா. இவர் வசித்து வரும் பகுதி அதிகம் காடுகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கே ஷீஜா செய்து வரும் வேலைதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஆண்களை போல தென்னை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும் வேலை செய்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களாக இந்த வேலை செய்து வரும் ஷீஜா, மரங்களில் சர்வ சாதாரணமாக ஏறிவிடுகிறார். ஏறுவதற்கேற்ப சல்வார், டாப், லுங்கி, ஒரு சட்டை அணிந்துக் கொண்டு கிடுகிடுவென்று ஏறிவிடுகிறார். மேலும் பதநீர் இறக்க பயன்படும் குடுவை மற்றும் கத்திகளை தன் இடுப்பில் கட்டிக் கொண்டு மேலே ஏறுகிறார். ஷீஜாவின் கணவர் தான் இந்த வேலையை செய்து வந்திருக்கிறார். பைக் விபத்து ஒன்றில் அவருக்கு காயம் ஏற்படவே கடந்த 6 மாதங்களாக அவரால் அந்தப் பணியை தொடர முடியவில்லை. அதனால் தன் மனைவியை அந்த வேலையை செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறார் ஷீஜாவின் கணவர் ஜெயக்குமார்.
தற்போது நாள் ஒன்றுக்கு எட்டு மரத்தில் ஏறிவிடுகிறார் ஷீஜா. இருப்பினும் மாதம் ஒன்றுக்கு, மரத்தின் உரிமையாளருக்கு ஷீஜா ரூ.300 தர வேண்டும். இதனால் ஷீஜாவின் குடும்பம் இன்னும் கஷ்டத்தில்தான் உள்ளனர். இருப்பினும் ஷீஜா தனது முயற்சியால் ஓரளவிற்கு குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.