கேரளாவில் வரதட்சனை கொடுமையால் தனது கணவர், மாமியாரால் பெண் ஒருவர் பட்டினி போடப்பட்டு, பல கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றரை வயது குழந்தை, 3 வயது குழந்தை என இரண்டு குழந்தைகளின் தாயான துஷாரா (27), மார்ச் 21ம் தேதி கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. துஷாரா உயிரிழந்து ஒரு வாரத்திற்கு பின் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துஷாராவின் கணவர் சந்துலால் மற்றும் மாமியார் கீதா
இந்த விவகாரம் குறித்து போலீஸ் கூறுகையில், துஷாரா தன் கணவர் மற்றும் மாமியாரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக கூறியுள்ளனர். அவர் எத்தனை நாட்கள் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது தெரிவில்லை எனவும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வாக்குமூலம் தர முன்வந்துள்ளதாக கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், துஷாரா உயிரிழந்தபோது அவர் வெறும் 20 கிலோ எடையில் மட்டுமே இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் வரதட்சனை கொடுமைக்கு உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். உயிரிழந்தபோது அவர் உடலில் சதையே இல்லாத அளவிற்கு துன்புறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். இது அனைவருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, துஷாராவின் கணவர் சந்துலால் (30) மற்றும் மாமியார் கீதா (55) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். துஷாராவின் இரண்டு குழந்தைகளும் கொல்லத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
‘வீட்டின் ஒரு அறையில் துஷாராவை தனிமையில் அடைத்து பூட்டிவிட்டு வெறும் சர்க்கரை தண்ணீரும் நீரில் ஊறவைத்த அரிசியை உண்ண கொடுத்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் இது இயற்கைக்கு மாறான வழக்காக கருதினோம், விசாரணையை தீவிரப்படுத்தியவுடன் தெரிந்தது, வரதட்சனை கொடுமையால் துஷாரா பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததுள்ளார் என்பது’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துஷாராவின் குடும்பத்தினர் காவல்துறையிடம் கூறுகையில், துஷாராவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், திருமணத்தின்போது சந்துலால் குடும்பத்திடம் நகைகள், பணம் என வரதட்சனை வழங்கியதோடு, மேலும் 2 லட்சம் பணத்தை பின்பு தருகிறோம் என கூறியதாக தெரிவித்தனர். துஷாராவை ஒரு வருடம்தான் சென்று பார்த்தோம். பின் 5 ஆண்டுகள் அவர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது கூட துஷாராவை சந்திக்க சந்துலாலின் குடும்பம் எங்களை அனுமதிக்கவில்லை என்றும், போலீசில் புகார் கொடுக்க நினைத்தோம், ஆனால் அதுவே எங்கள் மகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடுமோ என பயந்து புகாரளிக்கவில்லை; இப்படி ஒரு நிலையில் எங்கள் மகள் கொடுமைப்படுத்தப்பட்டது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது எனவும் கண்ணீர் சிந்தியபடி தெரிவித்தனர்.
துஷாராவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை நடந்துவருவதாக போலீஸார் கூறியுள்ளனர். கேரளாவில் பெண் ஒருவர் இப்படியான ஒரு நிலையில் கொடுமைப்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து பல சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், துஷாராவை கொடுமைப்படுத்தி கொன்ற கணவர் சந்துலால் மற்றும் மாமியார் கீதா கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேரளாவில் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.