நில ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆளான கேரள போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகியுள்ளார்.
கேரள போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாமஸ் சாண்டி. இவருக்கு சொந்தமாக ஆலப்புழாவில் ஒரு ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டுக்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தாமஸ் சாண்டி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அனுபமா, விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அமைச்சர் தாமஸ் சாண்டியின் ரிசார்ட்டுக்காக அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உண்மை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்விவகாரத்தில் அமைச்சரின் செயல் குறித்து கேரள உயர்நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்தது. எனவே தாமஸ் சாண்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா போன்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில், கேரள போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகியுள்ளார்.