சாஹத் (23) மற்றும் சியா பாவல் (21) என்ற இணையரின் குழந்தை இன்னும் பூமியில் பாதமே பதிக்காத நிலையிலும்கூட, அவர்களின் அந்த கரு தான் இன்றைய தினத்துக்கு பேசுபொருளாக இருக்கும் விஷயம். இந்தியாவில் எத்தனையோ இணையர்கள் கருவுறுகிறார்கள்… ஏன் இவர்கள் மட்டும் பேசுபொருளாக வேண்டும் என்கின்றீர்களா? காரணம் உள்ளது. இவர்கள் பிறரை போல நேரடி ஆண் – பெண் இணையரில்லை. பாலின மாற்று சிகிச்சைகள் மூலம் இருவருமே தங்களின் பாலினத்தை மாற்றியவர்கள். இவர்களுக்குத்தான் தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. பிறக்கப்போகும் அந்தக் குழந்தை, இந்தியாவின் முதல் ட்ரான்ஸ் இணையரின் குழந்தையாக இருக்கும்.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாஹத் (23) மற்றும் சியா பாவல் (21) என்ற மாற்று பாலின இணையர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள தொடங்கினர். அன்று தொடங்கிய அவர்களின் பயணத்தின் முடிவாக, சாஹத் தற்போது கருத்தரித்துள்ளார். சரியாக சொல்லவேண்டுமென்றால், சியாவின் கருவை தன் கருப்பையில் சுமக்கிறார் சாஹத். தற்போது 8 மாத குழந்தையை சுமக்கிறார் அவர்.
சியா பாவல், அடிப்படையில் பாரம்பரிய நடன கலைஞர். இவர் பேசுகையில், “நானும் சாஹத்தும் மூன்று வருடங்களுக்கு முன்னர் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்த போது, எங்கள் வாழ்க்கை பிற மாற்று பாலினத்தவர்களின் வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு இருக்குமென நினைத்தோம். பெரும்பாலான மாற்றுப்பாலின இணையர்கள், சமூகத்தாலும் தங்களின் குடும்பங்களாலுமே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரான்ஸ் மேன் (பாலினம் மாறிய பின் ஆணாக இருப்பது), ட்ரான்ஸ் பெண் (பாலினம் மாறிய பின் பெண்ணாக இருப்பது) – இப்படியான இருவர் இணையராக இருக்கும் எங்களுடைய பயணம் இனியும் தொடரும். நான் இப்போதும் ட்ரான்ஸ் பெண்ணாக ஹார்மோன் சிகிச்சைகள் மேற்கொண்டு தான் வருகிறேன். பிரசவத்துக்குப்பின்னும்கூட ஆறு மாதம் அல்லது ஒரு மாதம் வரை, சாஹத்துக்கும் அவரது ட்ரான்ஸ் மேன் – சிகிச்சைகளை தொடர்வார்” என்றுள்ளார்.
இவர்களில், சாஹத் தற்போது பிரசவ கால விடுப்பில் இருக்கிறாராம். இவர் பேறுகால விடுப்புக்கு முன் கணக்காளராக கேரளாவின் திருவணந்தபுரத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இருவருமே, தங்களின் குடும்பங்களைவிட்டு பிரிந்தே உள்ளனர். இருவருமே ட்ரான்ஸ் இணையர்களாக வாழ்ந்த போதிலும், மிகத்தீவிர ஆலோசனைக்குப்பின்னரே பெற்றோராக தீர்மானித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி சியா பேசுகையில், “சாஹத், தன் உடலிலிருந்த இரு மார்பகங்களையும் இப்போது சிகிச்சைகுப்பின் நீக்கிவிட்டார். குழந்தை பெறும் முடிவில் இருப்பதால், இப்போதைக்கு சில சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்” என்றுள்ளார்.
தற்போது சியாவும் சாஹத்தும், கோழிகோட்டின் அரசு மருத்துவக்கல்லூரியில் கர்ப்பகால சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்த மாதத்தில் பிரசவ தேதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், “மருத்துவர்கள், எங்களுக்கு நடந்த கருவூட்டல் செயல்முறை பற்றி அதிகம் வெளிப்படுத்த வேண்டாம் என்று எங்களிடம் கூறியுள்ளனர். சாஹத், தற்போது தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்டதாலும், எனக்கும் சிகிச்சைகள் முழுமையடையவில்லை என்பதாலும், மருத்துவக் கல்லூரியில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்றுள்ளார்.
தங்களின் கர்ப்பம் குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள சியா, அப்பதிவில் “நான் பிறப்பால் பெண்ணாக அறியப்படாவிட்டாலும், எனக்குள் எப்போதுமே ஒரு பெண்மை உணர்வு இருந்தது. அது, ஒரு குழந்தை என்னை அம்மா என்றழைக்க வேண்டும் என ஏங்கியது. நாங்கள் மூன்று வருடங்களாக ஒன்றாக இருக்கிறோம். என்னை போலவே, அவனுக்கும் (சாஹத்) ஒரு குழந்தை அவனை அப்பா என அழைக்க வேண்டுமென்ற கனவு இருந்தது. இதோ… இந்த எட்டு மாதங்கள் கழித்து இப்போது நாங்கள் இப்படி உள்ளோம். எங்களின் இந்த பயணத்தில் உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் என் நன்றி” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இது எப்படி சாத்தியம்?
இதை அறியும் முன், இவ்விருவரை பற்றியும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சியா பாவல் - இவர் பிறப்பால் ஆண். இப்போது பெண்ணாகும் சிகிச்சையில் இருக்கிறார் இவர். இக்கட்டுரையில் வரும் புகைப்படங்களில், இவர் சுடிதார்/ புடவை போன்ற உடைகளை உடுத்தியிருக்கிறார். பாரம்பர்ய நடனக்கலைஞர் இவர்.
சாஹத் - இவர் பிறப்பால் பெண். இப்போது ஆணாகும் சிகிச்சையில் இருக்கிறார் இவர். இக்கட்டுரையில் வரும் புகைப்படங்களில், கருவுற்றிருப்பது இவர்தான்.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். இவர்கள் கருவுறுதல் எப்படி சாத்தியமானது? பிறப்பால் பெண்ணாகவும், ஆணாகவும் அறியப்பட்ட இவர்கள், இயற்கையாகவே கருவுற வாய்ப்புள்ளது. பெரியளவிலான சிகிச்சைகள் தேவைப்படாது. அப்படியே இவர்கள் கருவுற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. கருவுறும் முன்னரே இருவரும் அடிப்படை பாலின மாற்று சிகிச்சைகளை தொடங்கியிருக்கின்றனர். இதனால் கருவுறுதலில் சிறு சிறு சிக்கல்கள் வந்திருக்கலாமென்றும், அதனாலேயே கருவுற மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கலாமென்றும் சொல்லபடுகிறது.
ஆக, இப்போது கருவை சுமப்பது, பிறப்பால் பெண்ணான சாஹத்தான். இவர் தற்போது சிகிச்சை மூலம் பாதி ஆணாகியிருக்கிறார். உதாரணத்துக்கு, மார்பாகங்களை நீக்கியுள்ளார்; சில ஹார்மோன் சிகிச்சைகளும் செய்துள்ளார். இருப்பினும் கருவுறுதலுக்காக, அவற்றை தொடரவில்லை. மேற்கொண்டு குழந்தை பிறப்புக்கு பின்னர் அதை தொடர்வார் (இதையே கட்டுரையின் மேலே “குழந்தை பெறும் முடிவில் இருப்பதால், இப்போதைக்கு சில சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்” என்று சியா குறிப்பிட்டுள்ளார்). அப்படி இவர் ஆணாக மாறும் பட்சத்தில், இவர் குழந்தையால் அப்பா என்றே அழைக்கப்படுவார். அதனால்தான், இவரை தாயுமானவன் என்று அழைக்கின்றனர் இணையவாசிகள்.
இணையரில் இன்னொருவரான சியா பாவல், பிறப்பால் ஆணாக அறியப்பட்டு, இப்போது பெண்ணாக மாறும் சிகிச்சையில் உள்ளவர். இவரும் குழந்தைக்காக தனது சில சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். (இவர்தான் பேட்டியின் இடையே, “நான் பிறப்பால் பெண்ணாக அறியப்படாவிட்டாலும், எனக்குள் எப்போதுமே ஒரு பெண்மை உணர்வு இருந்தது. அது, ஒரு குழந்தை என்னை அம்மா என்றழைக்க வேண்டும் என ஏங்கியது” என்றவர்). ஆக, தனது அடுத்தடுத்த சிகிச்சைக்குப்பின் இவர் குழந்தையின் அம்மாவாக அறியப்படுவார்.
இப்படியாக தங்களின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு இடையே பெற்றோராகும் முயற்சியிலும் இந்த இணையர் இணைந்துள்ளனர். இந்தியாவின் முதல் மாற்று பாலின பெற்றோர் இவர்களே!