பக்ரீத் பண்டிகை வியாபாரத்துக்காக துணிகளை வாங்கிவந்த வியாபாரி ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதை இலவசமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக மக்கள் தங்கள் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளதால் பக்ரீத் பண்டியை கொண்டாட முடியாமல் தவித்து வருகின் றனர்.
இந்நிலையில், பக்ரீத் வியாபாரத்துக்காக உடைகளை வாங்கி வந்திருந்த வியாபாரி நவ்ஷத் என்பவர், தான் வாங்கிய அனைத்து டிரெஸ்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி பிராட்வே தெருவில் கடை வைத்திருக்கும் நவுஷத், உடைகளை அள்ளி கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இதுபற்றி நவுஷத் கூறும்போது, ‘’கேரளாவில், கடந்த முறை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் இதை நான் செய்தேன். இப்போதும் செய்கிறேன். இவை அனைத்தும் எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது. அதை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.