பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகின்றது. கர்நாடகாவில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
பல்வேறு தரவுகளில் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, மின்சாரம், சாலை, குடிநீர், வீடு போன்ற வசதிகள் மக்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. அந்த வகையில், 2018ம் ஆண்டிற்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக கேரளா உள்ளது. முதல் 5 இடத்தில் கேரளாவை அடுத்து தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் உள்ளன.
இதில், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் சமூக பொருளாதார சூழலில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் கடந்த ஆண்டும் 4வது இடம் தான் பிடித்து இருந்தது.