கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சோனா எம். ஆப்ரஹாம். அவர் தன் 14 வயதில் பார் சேல் என்ற படத்தில் நடித்தார். படத்தின் இயக்குநர் சதீஷ் அனந்தபுரி. அந்தப் படத்திற்காக படமாக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது ஆபாச இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
இணையவெளியில் உலவும் ஆபாசக் காட்சிகளை உடனே நீக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "ஒரு வெறுக்கத்தக்க படத்தில் நான் நடித்ததை நினைத்து இன்றும் வருத்தமாக இருக்கிறது. பெண்களை தவறாக சித்திரிக்கும் கூறுகள் அந்தப் படத்தில் இருந்தன. அதாவது, தன் சகோதரி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதால், இளம் பெண்ணான காதல் சந்தியா தற்கொலை செய்துகொள்வார்" என்கிறார் சோனா.
பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சந்தியாவின் சகோதரி கதாபாத்திரத்தில்தான் சோனா நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்ததால், அவர் தற்கொலை முடிவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"நான் தற்கொலை செய்யவில்லை. ஏனெனில் இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். படத்தில் வரும் காட்சியில் இளம் சகோதரி தாக்கப்படுகிறார் என்றுதான் இயக்குநரும், அவரது குழுவினரும் தெரிவித்தார்கள். அப்போது எனக்கு வயது 14 . நான் அந்தக் காட்சிக்கு பொருத்தமாக இருக்கமாட்டேன் என்றேன். படப்பிடிப்புத் தளத்தில் 150க்கும் அதிகமான நபர்கள் இருந்தார்கள். அந்த வயதில் எனக்கு படத்தின் கருவையோ அல்லது அதன் முக்கியத்துவத்தையோ உணரும் பக்குவம் இல்லை" என்று விவரிக்கிறார் மாணவி சோனா.
பெற்றோர் மற்றும் படக்குழுவினர் இருக்கும்போது காலூரில் உள்ள இயக்குநரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்ததும், அவர் இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டார். ஆனால் சோனா பதினோராம் வகுப்பு படிக்கும்போது அந்தக் காட்சிகள் யு யூ டியூப் மற்றும் ஆபாச இணையதளங்களில் வெளியாகியுள்ளன. அவை தற்போதும் இணையத்தில் பரவி வருகிறது.
"நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அவை மிகப்பெரும் மனஅழுத்தம் தந்தன. என் நண்பர்களும் உறவினர்களும் ஆசிரியர்களும் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினர். என் குடும்பம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது. சமூகத்தின் கசப்பான சொற்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். நீங்கள் இப்படி வாழவேண்டுமா என்று கேட்கிறார்கள். எனக்கு ஏதோ பிரச்சனை என்பது மாதிரி மக்கள் பார்க்கிறார்கள். ஆசிரியர்களின் கண்ணோட்டமும் எனக்கு மிகப்பெரும் வலியை தந்துள்ளது" என்று கவலையுடன் பேசியுள்ளார்.
சோனாவும் அவரது குடும்பத்தினரும் தவறான படக்காட்சிகள் ஆபாச இணையதளங்களில் இருந்து நீக்கப்படவேண்டும் எனப் பல அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்துவிட்டனர். ஆனால் யாரிடம் இருந்தும் நம்பிக்கையான பதில் இல்லை. கடைசியாக கேரள காவல்துறையை நம்பி காத்திருக்கிறார்கள் சோனாவும் அவரது குடும்பத்தினரும்.