சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள்: நடை திறப்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள்: நடை திறப்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள்: நடை திறப்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்!
Published on

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாளை (16.11.22) சபரிமலை நடைதிறப்பு நடைபெற உள்ள நிலையில், 'வெர்ச்சுவல் கியூ' மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை நாளை (நவம்பர் 16 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதில், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.

அதன் பிறகு, உபதெய்வ கோவில்களில் தீபங்கள் ஏற்றப்படும். பின் மேல்சாந்தி 18 ஆம் படி முன் உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டு படிகள் ஏறிவரும் `வெர்ச்சுவல் க்யூ' மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி துவங்கும்.

தொடக்க நாளில் சிறப்பு பூஜைகள் இருக்காது. சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழாவும் 16 ஆம் தேதி மாலை நடைபெற இருக்கிறது. இதையடுத்து விருச்சிக ராசிக்கு முதல் நாளான நவம்பர் 17 ஆம் தேதி முதல் சபரிமலை மற்றும் மாளிகை புறம் ஆகிய இரு கோவில்களையும் புதிய மேல்சாந்திகள் திறப்பர். ஓராண்டு கால பூஜை முடிந்து, தற்போதைய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, 16 ஆம் தேதி இரவு 18-வது படியில் இறங்கி ஐய்யப்பனிடம் இருந்து விடைபெறுவார்.

மண்டல திருவிழா காலம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடக்கும். டிசம்பர் 27-ல் மண்டல பூஜை நடந்து முடிந்ததும் நடை அடைக்கப்படும். தொடர்ந்து மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். ஜனவரி 20 ஆம் தேதி முதல் விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சன்னிதானம், நிலக்கல், வடசேரிக்கரை ஆகிய இடங்களில் தற்காலிக காவல் நிலையங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. சிறப்பு பாதுகாப்பு வளையங்களாக பிரிக்கப்பட்டுள்ள 11 இடங்களில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையின் பிரசித்திபெற்ற தங்க அங்கி ஊர்வலம், திருவாபரண ஊர்வலம், மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசன நாட்களில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சன்னிதானம் மற்றும் பம்பையில் 134 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். போக்குவரத்தை கண்காணிக்க மாவட்ட எல்லைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு மற்றும் குழுக்கள் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், சுகாதாரம் போக்குவரத்து, தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com