கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே. ஸ்ரீநிவாசன் (45). இவர் அந்தப் பகுதி ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று அவர் தனது கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஸ்ரீநிவாசனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பாலக்காட்டில் எல்லப்புள்ளி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகி சுபைர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாகவே தற்போது ஸ்ரீநிவாசனை கொல்லப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரட்டை கொலை சம்பவத்தால் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், ஸ்ரீநிவாசன் கொலை வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. இதனிடையே, வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதற்காக எஸ்டிபிஐ மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்களை சேர்ந்த சுமார் 50 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்துள்ளனர்.