உள்ளரங்குகளில் காற்றின் வழியாக கொரோனா பரவுவதைத் தடுக்க கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது.
கொரோனா வைரஸினால், நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றே நமக்கு எதிரியாக மாறியுள்ளது. வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள உள்ளரங்குகளில் காற்றின் வழி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி சிறந்த பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணன் குரூப் என்பவரின் குழு இந்த கருவியைக் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதை தடுக்க ஸ்பீக்கர் போன்ற வடிவத்தில் கருவியை தயாரித்துள்ளனர். வொல்ஃப் ஏர் மாஸ்க் என அழைக்கப்படும் இந்த கருவி உள்ளரங்குகளில் பொருத்தப்படும்போது, அங்குள்ள வைரஸ்களை முற்றிலும் தடுக்கும் என இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருவியை பொருத்தும் இடத்தில் 15 நிமிடங்களில் கொரோனா வைரஸை 99 சதவீதம் அளவிற்கு குறைக்கும் திறன் கொண்டது. கருவியை ஆன் செய்துவிட்டால் சுமார் ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காற்றை சுத்தப்படுத்தி, வைரஸ் பரவாமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ள இந்தக் கருவியை 9 ஆண்டுகள் வரை, 60ஆயிரம் மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட, ராஜிவ்காந்தி உயிரி தொழில் நுட்பவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதனை பரிசோதித்து சிறந்த செயல்திறனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இக்கருவி முறையான அனுமதி பெற்று பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், வங்கிகள், நிகழ்வரங்குகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மக்கள் தொற்றில் இருந்து காக்கப்படுவர் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.