சமீபத்தில் மும்பையை அடுத்த லோனாவாலா என்ற பகுதியில், குடும்பம் ஒன்று திடீரென்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்த சம்பவத்தின் வீடியோவை பார்த்த சிலர், ‘இவர்களை காப்பாற்றமுடியாமல் போய்விட்டதே...’ என்று வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதே போன்று ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ஒருவரை தன்னுடைய துரிதமான நடவடிக்கையால் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார். இது எங்கு நடந்தது? எப்படி நடந்தது? பார்க்கலாம்...
கேரளாவின் பாலக்காட்டை அடுத்த ஆலத்தூரை சேர்ந்தவர் பொன்னுமணி (57). இவர் தனது வேலையை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சம்பவ தினத்தன்று கேரளாவில் பெய்த கனமழையால் காயத்திரிபுழா ஆறானது நிரம்பி வழிந்து ஓடி இருக்கிறது. அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பொன்னுமணி, எப்போதும் போல தரைப்பாலத்தை இருசக்கர வாகனத்தில் கடந்து விடலாம் என நினைத்து ஆற்றில் இறங்கியுள்ளார்.
ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஆற்றில் வெள்ளம் அன்று கரைபுரண்டு ஓடியதால் அவருடன் சேர்த்து இருசக்கர வாகனமும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. கரையில் இருந்தவர்கள் ஆற்றின் வெள்ளத்தைக் கண்டு பயந்து அவரை காப்பாற்ற நீரில் இறங்கவில்லை. அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அச்சமயம் அவர்களில் ஒருவரான சிவன் என்ற மூட்டைத் தூக்கும் தொழிலாளி, பொன்னுமணியை காப்பாற்ற அருகில் ஏதாவது கயிறு கிடைக்குமா என்று தேடியுள்ளார். ஆனால் அவரை காப்பாற்றக்கூடிய எந்த உபகரணங்களும் அருகில் இல்லாததால், சமயோஜிதமாக யோசித்து, கரையில் இருந்த அனைவரையும் ஒருவர் கைகளை ஒருவர் செயின் வடிவில் பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.
அதுபோல அனைவரும் வரிசையாக ஒருவரின் கைகளை ஒருவர் என்று செயின் போல பிடித்துக் கொண்டுள்ளனர். இவர்களில் முதலில் சிவன் இருந்துள்ளார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றில் இறங்கி பொன்னுமணியின் கைகளைப் பற்றி இழுத்து வந்தார். அவருக்கு பலம் சேர்க்கும் வகையில் கரை வரை இருந்த பிறர் உதவியுள்ளனர்.
இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால், பொன்னுமணி தனது இருசக்கர வாகனத்தை விடாமல் அதையும் இழுத்து வந்துவிட்டார். தக்கசமயத்தில் சிவன் செய்த செயலால், பொன்னுமணியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
நன்றி: மலையாள மனோரமா