மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த தாய்... பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய காவலர்!
கேரளாவில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தாய் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க, பாலுக்கு அழுத நான்கு மாத குழந்தைக்கு காவல்துறை பெண் அதிகாரி பாலூட்டியுள்ளார். இதை அவரோடு இருந்த பெண் காவலர்கள், நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
தங்கள் பதிவில் அவர்கள், “எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த 4 குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லாததால், காலை கொச்சி நகர மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற மூன்று குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்த 4 மாத குழந்தைக்கு என்ன கொடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, தாய்ப்பால் கொடுக்கும் நிலையிலிருந்த தாய் ஆர்யா (பெண் காவலர்) குழந்தையின் பசியாற்ற முன் வந்தார். தன் வயிற்றில் சுமக்கப்படாவிட்டாலும், தன் தாய்ப்பாலை அக்குழந்தைக்கு கொடுத்து பட்டினியிலிருந்த அக்குழந்தைக்கு தாயானார் ஆர்யா. உணவு கொடுத்தபின் அனைத்து குழந்தைகளும் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளனர். காவலர் ஆர்யாவின் இச்செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், காவலர் ஆர்யாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அமைச்சர் வீணா ஜார்ஜ் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “பச்சிளம் குழந்தைகளின் சரியான மற்றும் உயிர்நாடியான தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பற்றி காவலர் ஆர்யா நம் அனைவருக்கும் நினைவூட்டி உள்ளார்” என்றுள்ளார்.