திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு இணையதளத்தில் ஆபாசமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தனது திருமணத்திற்கு வடகராவில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் ஆர்டர் கொடுத்ததாக அந்தப்பெண் புகார் தெரிவித்தார். இதனையடுத்து வடகரா பகுதியில் உள்ள அந்த ஸ்டூடியோவுக்கு விரைந்த காவல்துறையினர் அந்தக் கடைக்கு சீல் வைத்தனர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக வயநாடு பகுதியைச் சேர்ந்த அந்தக் கடையின் உரிமையாளர் சதீஷன், தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான பிபிஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அந்தக்கடையில் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்கை கைப்பற்றியுள்ளனர். இதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் வேறு ஏதாவது பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி உள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.