சீனாவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரனோ வைரஸ் சவுதி அரேபியாவில் வாழும் இந்திய செவிலியரை தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த 30 செவிலியர்கள், கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கோட்டயத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியர் ஒருவருக்கு கொரனோ தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், செவிலியர்களின் உடல் நலனைக் காக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் 30 பேரும் இரு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு முறையான பரிசோதனைகள் செய்யப்படவில்லை எனவும் செலிலியர்களில் ஒருவர் தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய செலியர்கள் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் நிலை குறித்து சரியான தகவலை தெரிவிக்குமாறு செவிலியர்களின் பெற்றோர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சீனாவுக்கு வெளியே இந்த வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என கூற முடியாது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாத வகையில் துரித நடவடிக்கைகளை எடுக்கவும் சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரனோ வைரஸுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சீனாவில் மட்டும் சுமார் 600 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.