ஆக்சிஜன் உபரி உள்ள ஒரே மாநிலம் என்ற பெருமையைக் கொண்டுள்ள கேரளா, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கோவா மற்றும் கர்நாடகாவிற்கும் ஆக்சிஜன் அனுப்பி வருகிறது. இது எப்படி சாத்தியமானது? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கொரோனா இரண்டாவது அலையின் அதிதீவிரத்தால் இந்தியாவில் பல மாநிலங்களும் மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில்தான் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பில் உபரி இருக்கிறது என்று கேரளா தெரிவித்துள்ளது. தேசிய தலைநகரான டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நோயாளிகள் ஆக்சிஜனின் கடுமையான பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கையில், கேரளாவில் உள்ள மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு பழக்கப்படவில்லை. ஏனென்றால், ஆக்சிஜன் உபரி உள்ள ஒரே ஒரு மாநிலமாக கேரளா திகழ்கிறது. தங்கள் மாநிலத்தின் தேவை போக தமிழ்நாடு, கோவா மற்றும் கர்நாடகாவிற்கும் உபரி ஆக்சிஜனை அனுப்பி வருகிறது கேரளா.
"கோவாவிற்கு 19 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனையும், தமிழ்நாட்டின் மருத்துவமனைகளுக்கு 72 மெட்ரிக் டன்னையும், கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 36 மெட்ரிக் டன்னையும் கடந்த வாரத்தில் வழங்கியுள்ளோம். தற்போது எங்களிடம் ஆக்சிஜன் சப்ளை உபரி உள்ளது. அனைத்து ஆலைகளும் 100 சதவீத திறனில் இயங்கவில்லை. தேவை இருந்தால், நாம் 100 சதவீத திறனுக்கு செல்லலாம். சிலிண்டர்களை நிரப்புவதற்காக கேரளாவில் 11 ஏ.எஸ்.யூ ஆலைகள் உள்ளன.
கேரளாவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் எங்களுக்கு எப்போதும் உண்டு. ஆனால், இது பெரும்பாலும் தொழில்களுக்காக தயாரிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களின் மிகப் பெரிய அளவில் ஆக்சிஜனைக் கோருவதால் இப்போது மருத்துவ ஆக்சிஜனை அதிக அளவில் தயாரிக்கிறோம்" என்று வெடிபொருள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) துணை தலைமை கட்டுப்பாட்டாளரும், கேரளா மற்றும் லட்சத்தீவுக்கான ஆக்சிஜன் விநியோகத்திற்கான அதிகாரியுமான ஆர்.வேணுகோபால் கூறியிருக்கிறார்.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) தரவின்படி, கேரளாவின் ஆக்சிஜன் உற்பத்தி ஒரு நாளைக்கு 199 மெட்ரிக் டன் (எம்.டி.பி.டி) ஆகும். இதில் கொரோனா பராமரிப்புக்கான தேவை 35 மெட்ரிக் டன். அதேசமயம் கொரோனா அல்லாத மருத்துவ தேவைகளுக்கு 45 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.
149 மெட்ரிக் டன் கொண்ட ஐனாக்ஸ், 6 மெட்ரிக் டன் உடன் கேரள மினரல்ஸ் மற்றும் மெட்டல்ஸ், 5.45 மெட்ரிக் டன் உடன் கொச்சின் ஷிப்யார்ட் மற்றும் 0.322 மெட்ரிக் டன் உடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை கேரள மாநிலத்தின் முக்கிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஆகும். இதுபோக, கூடுதலாக, 11 காற்று பிரிக்கும் அலகுகள் (ASU) சுமார் 44 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
மேலும், பாலக்காட்டில் 4 மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஏ.எஸ்.யூ ஆலை அமைக்க கமிஷன் ஒன்று அமைத்துள்ளது. கூடுதலாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் உள்ள கேரள அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு மூன்று பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் சிஸ்டங்களை (பி.எஸ்.ஏ) வழங்கியுள்ளது.
பெசோவின் பங்கு:
பெசோ எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் உயிர்காக்கும் வாயுவான ஆக்சிஜன் கிடைப்பதை மதிப்பீடு செய்து, சேமிப்பு திறன் உள்ளிட்டவைகளை கவனித்து வருகிறது.
இந்திய அரசால் உருவாக்கப்பட்ட 123 ஆண்டுகள் பழமையான துறை, பெசோ. இது அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதை கண்காணித்து உறுதி செய்கிறது. பெசோ, கேரளா மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து, மார்ச் 2020 முதல் மாநிலத்தின் ஆக்சிஜன் தேவைகளை கண்காணித்து வருகிறது. அதாவது, கடந்த ஓர் ஆண்டாக கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து கண்காணித்து, அதற்கேற்ப அவர்கள் மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரித்து வருகின்றனர். ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து, தூரம், சாலை நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கவனித்து, மதிப்பீடு செய்து மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்து வருகிறது.
தேவை அதிகரிப்பு:
கேரளாவிலும் எதிர்வரும் நாள்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் 1,05,000 நோயாளிகளுக்கு 51.45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், ஒரு நாளைக்கு 27,000 என்கிற அளவில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கும் தேவை அதிகரிக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க மாநிலம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, "ஏப்ரல் 2020 ஆண்டிலேயே, கோவிட் உச்சகட்டத்தை அடையும் நிலையில் கேரள மாநிலத்தின் ஆக்சிஜன் தேவையைக் கணக்கிட்டு பொதுத்துறை உற்பத்தி நிலையங்கள் வாயிலாக மாநிலத்தின் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் உற்பத்தியை உறுதி செய்தது கேரளா அரசு. இன்றைக்கு அதன் ஒரு நாள் உற்பத்தித் திறன் 155 மெட்ரிக் டன். அதன் தேக்கத் திறன் 1100 மெட்ரிக் டன். மாநிலத்தின் 23 நிலையங்களும் 24X7 செயல்பட்டு சொந்தத் தேவைக்காகவும், பிறர் தேவைக்காகவும் உற்பத்தியில் ஈடுபடுகின்றன" என்றார்.
கேரளாவில் முதல் அலையின்போதே பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக இருப்பதை உணர்ந்து, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு ரூ.58 கோடி மதிப்பில் ஆக்சிஜன் ஆலை அமைத்தது. இது மட்டுமில்லாமல், முதல் அலைக்குப் பிறகு, கேரளா ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதுடன், வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்கியது. தற்போது, 9,735 ஐ.சி.யூ படுக்கை, 3,776 வென்டிலேட்டர்கள் என அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.