பயங்கர நிலச்சரிவு! கொத்து கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்.. சோகத்தில் மூழ்கிய கேரளா! நடந்தது என்ன?

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குடியரசு தலைவர்,பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வயநாட்டின் நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
Wayanad Landslide
Wayanad LandslidePT
Published on

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் கேரள மாநிலம் வயநாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வயநாட்டின் நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மாலா என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிக்கு அருகே உள்ள வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில், 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையால், மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தொலைபேசி வாயிலாக பேசினார்.

மேலும், ”வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும், காயமடைந்தவர்களுடன் பிரார்த்தனைகளும் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்த அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் கேரளாவுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் கேரளா முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், “வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடமும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசி வயநாடு சூழல் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நிவாரண பணிகளில் பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசு தலைவர்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்.

ராகுல் காந்தி

"வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன், அவர்கள் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உறுதியளித்துள்ளனர்.

அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் உதவிகள் தேவைப்பட்டால், எங்களுக்குத் தெரிவிக்கவும் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு அனைத்து UDF ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே

”வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும் மாநில மற்றும் மத்திய அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். ”

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

”கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு சம்பவங்களால் ஆழ்ந்த கவலையளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்‌ போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த இரண்டாவது குழு செல்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்.

”வயநாடு குறித்து அதிகாலையில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடி அனைத்தையும் கேட்டு அறிந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தார். அதே நேரத்தில் நிலைமையை ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ இராணுவ மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு உத்தரவிட்டார் ஏற்கனவே அவர்கள் புறப்பட்டு விட்டனர்.

மலைப்பாங்கான பகுதி என்பதால் ராணுவம் அங்கு செல்வது மிகவும் கடினம். ஹெலிகாப்டர் மற்றும் பிற உதவிகள் தேவை. மாநில அரசும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. பிரதமர் கேரளா முதல்வருடன் பேசி இருக்கிறார். நாங்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.

இந்தவகையில், தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com