கேரளாவைச் சேர்ந்த அபிஜித் என்பவர், தனது கர்ப்பிணி மனைவியுடன், உக்ரைனில் உள்ள கீவ் நகரில் சிக்கிக்கொண்டார். மத்திய அரசின் 'ஆபரேஷன் கங்கா' நடவடிக்கையின் கீழ் இவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு போலந்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலந்து-உக்ரைன் எல்லையில் இருந்து பேசிய அபிஜித், "எனது மனைவி போலந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். எனது மனைவியும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது குழந்தை வரும் மார்ச் 26 ஆம் தேதி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தொடங்கிய மீட்பு நடவடிக்கையின் பெயரைக் கொண்டு வரவிருக்கும் எனது குழந்தைக்கு கங்கா என்று பெயரிட முடிவு செய்துள்ளேன்" என்று கூறினார்
மேலும்,"நான் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறேன். கங்கா நடவடிக்கையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளின் உதவியுடன் நான் மீட்கப்பட்டு போலந்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி. உக்ரைனில் இருந்துன் போலந்துக்கு செல்ல நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. கர்ப்பிணியான எனது மனைவி தனது மருத்துவ பாதுகாப்பு காரணங்களுக்காக போலந்தில் உள்ள மருத்துவமனையில் தங்க வேண்டியுள்ளது" என தெரிவித்தார்
உக்ரைனில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தை தொடங்கி ஆயிரக்கணக்கானவர்களை மீட்டு வருகிறது.