கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி இடுக்கி மாவட்டம் பீருமேடு மண்டல மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குமுளியில் நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறில் ஒன்பது வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தார். அதனையொட்டி 12 வயது நிரம்பிய சிறுமி ஒருவரும் மர்மமான முறையில் இறந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து இறந்ததால் சந்தேகம் எழுந்தது. ஆகவே இந்த விவகாரம் பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. போலீஸ் விசாரணையில் இரு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கில் மறு விசாரணையும், சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கோரி பீருமேடு மண்டல மகிளா காங்கிரஸ் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.