சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேரளா மற்றும் தமிழக இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கேரள போலீசார் மற்றும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத இளைஞர்களே இல்லாத காலம் இது. இயற்கை பேரிடர் போன்ற இக்கட்டான காலங்களில் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றாக இணையும் இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்றனர். இதனால் பலரின் பாராட்டுக்களையும் அவர்கள் பெறுகின்றனர். ஆனால் சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மற்றும் தமிழக இளைஞர்கள் மத்தியில் சண்டை அதிகரித்து வருகிறது. தமிழ் பெண்கள் கேரள ஆண்களை வசைபாடியும், கேரள பெண்கள் தமிழக ஆண்களை வசைபாடியும் வெளியாகும் வீடியோக்களை அனைவரும் பார்த்திருப்போம். கேரள வெள்ள நேரத்தில் தமிழக மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை கேளராவிற்கு செய்தனர்.
ஆனால் அந்த ஒற்றுமை நிலைப்பதற்குள்ளாகவே இரண்டு மாநில இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் மோதல் வலுத்தது பெரும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த விரோத மனப்போக்கை மாற்றி ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் கேரள போலீசார் மற்றும் சிலர் அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் #KeralaLovesTamilNadu மற்றும் #வந்தாரை_வாழ_வைக்கும்_தமிழ்_நாடு, #WeLoveTamilNadu போன்ற ஹேஷ்டேக்குள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக நடிகை ரீமா கல்லிங்கல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ தமிழகத்தை சேர்ந்த தோழிக்கு நன்றி கூறும் வாய்ப்பாக இதனை கருதுகிறேன். என் தோழி சுபா ஜே ராவ். தமிழகத்தைச் சேர்ந்த இவருடன் என் நண்பர் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்தான் பேசினேன். ஆனால் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. இருப்பினும் வெள்ள நேரத்தில் அடிக்கடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தார். ஒவ்வொரு முறையும் அழைத்து நலம் விசாரித்ததை என்னால் மறக்கவே முடியாது. இந்த ஓணம் பண்டிகையின்போது சுபாவிற்கு வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நீங்களும் ஒருபகுதி தான்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் அரசியல் கட்சியை சேர்ந்த விடி பால்ராம், “ தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞர்களின் வெறுப்பு பேச்சுகளை காண நேரிட்டது. இதன் தொடக்கம் எதுவென்று தெரியவில்லை. இருப்பினும் இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது. கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் எப்போதுமே ஒரு நீண்ட கால அன்பு, மரியாதை, ஒத்துழைப்பு இருக்கிறது. கேரளாவின் மிக மோசமான நேரத்தில் தமிழக மக்கள் நல் உள்ளத்துடன் உதவி செய்தனர். இரு மாநிலத்தின் மீதும் அக்கறை மற்றும் அன்பு இல்லாதவர்களே இத்தகைய வெறுப்பு வீடியோக்களை வெளியிடுகின்றனர். நம்முடையே சகோதரத்துவத்தை முறிக்க அவர்கள் நினைக்கிறார்கள். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
இதேபோல கேரள போலீசாரின் அலுவலக ஃபேஸ்புக் பக்கத்திலும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. “ ஏதோ தனிப்பட்ட இருவரின் சண்டை தற்போது கேரள மற்றும் தமிழக இளைஞர்களின் சண்டையாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மிருகத்தனம் கொண்டவர்கள். இதுபோன்ற வெறுப்பு வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என கேரள மக்களை கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள போலீசாரின் முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Courtesy: TheNewsMinute