கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் ஐயப்ப பக்தர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அத்துடன் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டமும் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக தோல்வி கண்டுள்ளது. அதேசமயம் பெரும்பாலான இடங்களை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக 39 இடங்களுக்கான இடைத்தேர்தலில் 21 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் பாஜக வெறும் இரண்டு இடங்களிலும் வெற்றி கண்டுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள மாநில தொழில்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான ஜெயராமன், தேர்தலில் பெற்றுள்ள வெற்றி அரசின் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிக்காட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.