அண்டை மாநிலமான கேரளத்தில், சி.பி.எம் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அங்கு பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரவு பெற்ற இடது முன்னணி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கும் ஒரு விவகாரம் கேரள அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
கேரளாவில் இடது முன்னணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், கே.டி.ஜலீல். இவரிடம், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவது குறித்தும், மாவட்டத்தில் இருந்து ஹவாலா பரிவர்த்தனைகள் குறித்தும் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், “மலப்புரத்தில் தங்கம் கடத்துபவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்” என்றதுடன், “தங்கக் கடத்தல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டாம்” எனவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து சர்ச்சையாகி இருப்பதுடன், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
“ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாகப் பேசியதற்கு ஜலீல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கேரள முஸ்லிம் லீக் தலைவர்கள் வலியுறுத்தினர். அதுபோல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஜலீலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அவர் சவால் விட்டுள்ளார். “புள்ளிவிவரங்களின்படி, இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஹஜ் புனித யாத்திரைக்குச் சென்று திரும்பிய மதகுருமார்கள்கூட, தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டதாகக் காட்டுவதற்கு பதிவுகள் இருக்கின்றன” என அவர் சவால் விடுத்துள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் தன்மீதான தங்கக் கடத்தல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்ட ஜலீல், “நான் தங்கம் கடத்தியதாக பொய் வழக்கு போட்டு ஊடகங்கள், முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸால் வேட்டையாடப்பட்ட போது, மலப்புரத்தை சேர்ந்த மத குருமார்கள் எல்லாம் எங்கேபோய் ஒளிந்தார்கள்” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தவனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மாநிலத்தில் இடதுசாரி அரசியலின் முக்கிய முஸ்லிம் முகமாக கருதப்படுகிறார். இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்தை (சிமி) பின்பற்றிய ஜலீல், பின்னர் முஸ்லிம் லீக்கின் மாணவர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார்.
திருரங்கடி பிஎஸ்எம்ஓ கல்லூரியில் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், முஸ்லிம் லீக் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளைஞர் பிரிவில் இருந்து நீக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் தலைவரும், அரசியல் தலைவர்களில் ஒருவருமான பி.கே.குன்ஹாலிக்குட்டியை தோற்கடித்து, இடதுசாரிகளின் ஆதரவுடன் சுயேட்சையாக கேரள சட்டசபைக்குள் நுழைந்தார். அவர் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தவனூரில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-21 இடது ஜனநாயக முன்னணி (LDF) தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார்.
இதையும் படிக்க: கோவா விவகாரம் | தொடரும் போராட்டம்.. பாஜகவைச் சாடிய ராகுல் காந்தி!