‘மல்லு இந்து அதிகாரிகள்’ மதத்தின் பேரில் வாட்ஸ்-அப் குழு... கேரள ஐஏஎஸ் சஸ்பெண்ட்! முழு விபரம்!
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மல்லு இந்து அதிகாரிகள் எனும் வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் அட்மினாக தொழில் துறை இயக்குநரான ஐஏஎஸ் கோபாலகிருஷ்ணன் இருந்துள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்தவர்.
வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள், தங்களது எண்களை குழுவில் சேர்த்தது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். எதிர்ப்பு எழுந்த நிலையில் சில மணி நேரங்களில் அந்த குழு நீக்கப்பட்டது. குழு தொடர்பாக பதிலளித்த பதிலளித்த கோபாலகிருஷ்ணன் தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், மல்லு முஸ்லீம் அதிகாரிகள் எனும் பெயரில் வேறு ஒரு குழு உட்பட 11 உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், “நண்பர் ஒருவர் இதுதொடர்பாக என்னிடம் கூறியபின்பே இதுகுறித்து எனக்கு தெரியவந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ் - அப் நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோபாலகிருஷ்ணனது செல்போன் ஹேக் செய்யப்படவில்லை என்பது நிரூபனமானது.
அதுமட்டுமின்றி அவரது செல்போன் மூன்று நான்குமுறை ரீ செட் செய்யப்பட்டுள்ளதும் அதன்பின்பே காவல்துறையினரிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறும் கோபாலகிருஷ்ணன், ஏன் போன் ரீ செட் செய்யப்பட்டது என்பது தொடர்பாக எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வாட்ஸ் அப் குழு தொடர்பான செய்திகள் பொதுவெளியில் வந்து கவனம் பெற்ற பிறகே கோபால கிருஷ்ணன் இதுதொடர்பாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் கேடர் ஒற்றுமையை சீர்குலைக்கவும், வகுப்புவாத ஒற்றுமையை வளர்க்கவும் இந்த குழு உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்திய சேவை நடத்தை விதிகள் 1968ன் பல்வேறு பிரிவுகளை மீறுவதாகவும் கருதப்பட்டது. கோபாலகிருஷ்ணன் துறைசார்ந்த ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணனை முதலமைச்சர் பினராயி விஜயன் இடைநீக்கம் செய்தார். வேளாண் துறை சிறப்பு செயலாளர் என். பிரசாந்த் என்ற ஐஏஎஸ் அதிகாரியும், கூடுதல் தலைமைச் செயலாளரான ஜெயதிலக்கிற்கு எதிராக பதிவுகளை பதிவிட்ட புகாரின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.