'தி கேரளா ஸ்டோரி' : அனல் பறக்கும் விவாதம்.. சூடுபிடிக்கும் போராட்டங்கள்.. களத்தில் இறங்கிய பிரதமர்!

'தி கேரளா ஸ்டோரி' படத்தில் ஒரு மதத்துக்கு எதிராக எதுவும் சொல்லப்படவில்லை என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத்தான் சொல்லப்பட்டுள்ளது என்றும் கேரள உயர்நீதிமன்றம் கூறியது.
The Kerala Story
The Kerala Storypt desk
Published on

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தியில் இன்று (மே 5ஆம் தேதி) ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததால் ரிலீஸிலும் சர்ச்சையும் பரபரப்பும் தொடர்ந்துவருகிறது.

சர்ச்சையை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி' பட ட்ரெய்லர்!

ட்ரெய்லரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தமைக்காக ஒரு இளம்பெண் கைது செய்யப்படுகிறார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அப்போது, தான் யார் என்பதை அவர் சொல்வது போன்ற FLASH BACK காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அதன்படி பிறப்பால் இந்துவான அந்தப் பெண்ணுக்கு, இஸ்லாமிய மாணவி ஒருவரால் இந்த நிலை ஏற்பட்டதாக காட்டப்படுகிறது.

The Kerala story
The Kerala storypt desk

இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது.

இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!

இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் 'THE கேரளா ஸ்டோரி' திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது.

The Kerala story
The Kerala storypt desk

இதற்கிடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தொடரப்பட்டது. ஆனால் அதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நல்லிணக்கத்தை குலைக்க முயற்சி - பினராயி விஜயன் கண்டனம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளனர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!

'தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ''படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின்  ட்ரெய்லரே உணர்த்துகிறது'' என்றார்.

kerala high court
kerala high court

”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” - நீதிபதி

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார்.

அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.   'தி கேரளா ஸ்டோரி' படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்  

படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இது உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்ட புனைகதை’ என்று நாங்கள் டிஸ்கிளைமரில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரிய  சான்றிதழ் தேவையில்லை எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள 'கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்'  என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், 'தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.

'தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து பிரதமர் சொன்ன கருத்து!

'தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பிரதமர் பேசுகையில், “தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தைத்தான் தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த திரைப்படம் கேரளாவை சேர்ந்த பெண்கள் எப்படி ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதங்களில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் போன்றவை நடைபெறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாழாகிறது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு துணைபோகிறது” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com