மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நுழைந்த வழக்கில் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்ட பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் சபரிமலை கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. அப்போது பெண்ணியவாதியான ரெஹானா பாத்திமா என்பவர் சபரிமலைக்கு செல்ல முயன்றார். இருமுடி அணிந்துகொண்டு கருப்பு உடையில் ஐயப்ப பக்தர் போன்று ரெஹானா கோயிலுக்கு செல்ல முயன்றார்.
சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் ரெஹானா அழைத்து செல்லப்பட்ட நிலையில் அதற்கு மேல் அனுப்ப மறுப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெஹானா பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே ரெஹானா பாத்திமா சில சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் இந்த பதிவுகள் இருப்பதாக கூறி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ரெஹானா பாத்திமாவின் பதிவுகள் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பத்தனம்திட்டா போலீசார் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். அவரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்தோடு போலீசார் தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து ரெஹானா பாத்திமாவை கடந்த மாதம் 27 ஆம் தேதி கேரள போலீஸார் கைது செய்தனர்.