19 வயது பெண்ணுடன் 18 வயது ஆண் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய திருமண சட்டத்தின் படி தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் உள்ளது. நிச்சயக்கப்பட்டுள்ள வரம்பிற்குள் திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், 2009ம் ஆண்டிற்கு பிறகு திருமணம் நடைபெற்ற பின்னர் அதனை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருமணம் செய்யாமல் விருப்பத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழும் மேற்கத்திய முறையும் இந்தியாவில் பரவலாக உள்ளது. ஆனால், அது தொடர்பாக சட்டங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், 18 ஆணுடன், 19 வயது பெண் சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
ஆழப்புழா பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் தன்னுடைய 19 வயது மகளை 18 வயது ஆண் கடத்தி சென்று விட்டதாகவும், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிதம்பரேஷ் மற்றும் ஜோதிந்திரநாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 19 வயது பெண்ணுடன் 18 வயது ஆண் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், “நம்முடைய சமுதாயத்தில் ‘லிவ்விங் டு கெதர்’ முறை இருக்கிறது என்ற உண்மையை கண்களை கட்டிக் கொண்டு மறுக்க முடியாது. இதுபோல் சேர்ந்து வாழும் ஜோடிகளை ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு மனு) வழக்கு மூலம் பிரிக்க கூடாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 19 வயதுடைய அந்தப் பெண், 18 வயதுடைய ஆணுடன் சேர்ந்து வாழலாம் என்றும் திருமண வயது வந்த உடன் அந்த ஆணுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆணுக்கு திருமண உச்சவரம்பு 21 ஆக இருக்கும் நிலையில் கேரள உயர்நீதிமன்றம் 18 வயது ஆணை பெண்ணுடன் வாழ அனுமதித்துள்ள புதிய விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இருப்பினும், சட்டப்பூர்வமான வயது வரம்பை எட்டாத நிலையிலும், வயதுக்கு வந்த ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதற்கான (லிவ்விங் டுகெதர்) உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.