குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திருத்தத்தை திரும்ப பெறவேண்டி டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. குடியுரிமைத் திருத்த சட்டம் சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஏ-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முதல் மாநில அரசு கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.