கேரளா மாநில போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் இளம்பெண்ணுக்கு செய்த உதவி அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.
கேரளா மாநில போக்குவரத்து கழகத்தில் கோபகுமார் (Gopakumar ) ஓட்டுநராகவும், ஷாய்ஜூ (Shaiju) நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருவனந்தபுரம் - கோயம்புத்தூர் செல்லும் பேருந்தை இயக்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று இவர்களது பேருந்தில் அதிரா என்ற பெண் கொல்லம் செல்வதற்காக ஏறியுள்ளார். நள்ளிரவு ஒரு மணியளவில் அந்தப்பெண் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது அப்பகுதியில் மழைப்பொழிவு இருந்துள்ளது. நள்ளிரவு என்பதால் அந்தப்பெண்ணை தனியாக விட்டுவிட மனமில்லாமல் அவரது வீட்டில் இருந்து ஆட்கள் வந்து அழைத்து செல்லும் வரை பேருந்தை அங்கேயே நிறுத்தியுள்ளனர். அந்தப்பெண்ணின் சகோதரர் வந்து அழைத்து சென்ற பின்னரே பேருந்தை அங்கிருந்து கிளப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஓட்டுநர் கோபகுமார் கூறுகையில், அந்தப்பெண் அங்கமாலிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏறினார். பேருந்து கொல்லத்தை அடைந்த போது கனமழை பெய்து வந்தது. சங்கரமங்கலம் பேருந்து நிறுத்தம் அடைந்தபோது நள்ளிரவு 1.30 மணி. அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. அப்போது அவரிடம் உங்களை அழைத்து செல்ல யாராவது வருகிறார்களா எனக் கேட்டோம். தனது சகோதரன் அழைத்துச்செல்ல வருவார் நீங்கள் செல்லுங்கள் என்றார். ஆனால் அவரது சகோதரர் வந்த பிறகே அங்கிருந்து செல்வது என முடிவெடுத்தோம் என்றார்.
நாங்கள் அந்தப்பெண்ணை பேருந்தின் உள்ளேயே அமர சொன்னோம். நாங்கள் அங்கு காத்திருந்தோம் பத்து நிமிடத்தில் அவரது சகோதரர் வந்தார். அவர் போகும்போது எங்களுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார். நல்லவேளையாக பேருந்தில் குறைவான பயணிகளே இருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் அனைவரும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றார் நடத்துனர் ஷாய்ஜூ.
இவர்களது இந்த உதவி குறித்து அந்தப்பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்தப்பேருந்து ஓட்டுநருக்கும், நடத்துனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.