கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ள ஸ்வப்னா சுரேஷ் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் அடங்கிய பை ஒன்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார். இவையெல்லாம் ஆதாரமற்ற புகார்கள் என பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் இந்த தங்க கடத்தல் சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.
முதல்வர் பினராயி விஜயன் உட்பட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள ஆளும் கட்சிக்கு தொடர்புடைய இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. பல நாட்கள் இழுபறிக்குப் பிறகு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷக்கு, கேரள மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறும்படி அமலாக்கத்துறையினர் நெருக்கடி கொடுப்பதாக ஸ்வப்னா பேசுவதுபோல ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த ஊழலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் நேற்று வாக்குமூலம் அளித்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது. நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், " பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர், விஜயனின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோரின் பெயர்களும் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. 2016ஆம் ஆண்டு துபாயில் இருந்த முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூபாய் நோட்டுகள் அடங்கிய பேக்கேஜ் அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிர்ச்சி தகவலை ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.
“கமலாவும் வீணாவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். நான் துன்பப்படுவதற்கு மட்டுமே எஞ்சியுள்ளேன். விசாரணை முகமைகள் முன் நான் அளித்த வாக்குமூலங்களை யாரும் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தக் கூடாது. 2016ல் நான் தூதரகத்தின் நிர்வாகச் செயலாளராக இருந்தபோது சிவசங்கர் என்னை முதல்முறையாகச் சந்தித்தார். துபாய்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய பையை எடுத்துச் செல்ல முதல்வர் மறந்துவிட்டார் என்று சிவசங்கர் என்னிடம் கூறினார். பையை (திருவனந்தபுரத்தில்) தூதரகத்திற்கு கொண்டு வந்தபோது, அதை ஸ்கேன் செய்து பார்த்தோம், அதில் கரன்சி இருப்பதை உணர்ந்தோம். நீதிமன்றத்தில் எனது வாக்குமூலம் குறித்த அனைத்தையும் என்னால் வெளிப்படுத்த முடியாது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஸ்வப்னா சுரேஷ்.
மேலும் பிரியாணி சமைக்கப் பயன்படுத்தப்படும் அண்டாக்கள் கூட முதல்வர் அலுவலகத்திற்கு கைமாற்றப்பட்டதாக ஸ்வப்னா செய்தியாளர்களிடம் கூறினார். “பல சமயங்களில் பிரியாணி சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் துணைத் தூதரகத்திலிருந்து கிளிஃப் ஹவுஸுக்கு (முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம்) அனுப்பப்பட்டது. தூதரகத்தில் இருந்து க்ளிஃப் ஹவுஸுக்கு கனரக உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மாற்றப்படுவது பலமுறை நடந்துள்ளது. இது சிவசங்கரின் முன் செய்யப்பட்டது, ”என்று ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தார். “தங்கம் கடத்தல் வழக்கு வெளியானதும், விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியிருந்தது. அரசியல் காரணங்களால் எங்கள் மீது சில குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகின்றன. இது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்... ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் லாபம் ஈட்ட முயற்சிப்பவர்களுக்கு கேரள சமூகம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.