பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சேமிக்கும் பழக்கத்தை சிறுவயது முதல் சொல்லிக்கொடுத்து வருகின்றனர். சில குழந்தைகள் ஆசிரியர்கள் சொல்வதை மனதில் பிடித்துக்கொண்டு சேமிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவதை பார்க்கலாம். அப்படி ஒரு குழந்தை தனது சேமிப்பால் லட்சாதிபதி ஆனது மட்டுமின்றி தனது அப்பாவின் வீட்டுக்கடனை அடைத்த நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
கேரள மாநிலம் கருவாரகுண்டில் வசித்து வருபவர் இப்ராகிம். இவரது செல்ல ‘செல்வ' மகள், 9 வயதான பாத்திமா நஷ்வா. இவர் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்திய அரசாங்கம் முதல் முறையாக இருபது ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட சமயம், 20 ரூபாய் நோட்டுகளின் மேல் பாத்திமாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதை சேகரிக்க தொடங்கியிருக்கிறார் அவர்.
நஷ்வாவின் சேமிப்பு பழக்கம் இப்ராகிமிற்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து மகளின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தனக்கு கிடைத்த இருபது ரூபாய் நோட்டுகளை எல்லாம் தனது செல்ல மகளிடம் கொடுத்து வந்துள்ளார். பாத்திமா நஷ்வாவும், கடந்த இரு வருடங்களாக சிறுக சிறுக 20 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து சேர்த்து வந்துள்ளார்.
கடந்தவாரம், தான் சேமித்து வைத்த 20 ரூபாய் அடங்கிய மூட்டையை தனது தந்தை இப்ராகிமிடம் கொடுத்து அதை எண்ணச் சொல்லியிருக்கிறார். 20 ரூபாய் நோட்டை எண்ணிப்பார்த்த இப்ராகிம் இன்ப அதிர்சியடைந்துள்ளார். காரணம், அந்த மூட்டையில் 1,03,000 ரூபாய் அதாவது 5,150 இருபது ரூபாய் நோட்டுகள் சேர்ந்திருந்தது.
சிறுக சிறுக சேமித்து பெரும் தொகையாக திருப்பி கொடுத்த தனது மகளுக்கு நல்ல ஒரு பரிசாக வாங்கிக்கொடுத்து, மீதம் உள்ள தொகையை வீட்டுக்கடனை அடைக்க பயன்படுத்தியிருக்கிறார் தந்தை இப்ராஹிம்.!
நன்றி: மலையாளம் மனோரமா